என்னங்க சார் இது.. கோயில்ல இப்படி பண்ணலாமா ? கொதிக்கும் பக்தர்கள்.. காஞ்சிபுரத்தில் நடப்பது என்ன ?
Kanchipuram : " காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 100 ரூபாய் டிக்கெட்டில் முறைகேடு நடப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது "
காஞ்சிபுரம் கோயில் நகரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தாலும், சிவகாஞ்சி பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. சிவனுக்கு பஞ்ச பூத தலங்களில் நிலத்திற்குரிய கோயிலாக ஏகாம்பரநாதர் கோயில் திகழ்ந்து வருகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - kanchipuram Ekambareswarar Temple
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சார்ந்த பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். தற்போது சபரிமலை மற்றும் மேல்மருவத்தூர் கோயில் சீசன் என்பதால், சபரிமலை மற்றும் மேல்மருவத்திற்கு செல்லும் பக்தர்கள், காஞ்சிபுரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள், பல ஆயிரக்கணக்கானோர் தினமும் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். அதே போன்று அதிக அளவு பக்தர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளனர்.
விரைவு தரிசன கட்டணங்கள்
இந்த நிலையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விரைவு தரிசனம் 20 ரூபாய் மற்றும் அதிவிரைவு தரிசனம் நபர் ஒன்றுக்கு 100 ரூபாய் என இரண்டு விதங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பதில், பல லட்ச ரூபாய் முறைகேடு நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக 100 ரூபாய் கட்டண தரிசனத்தில், முறைகேடு நடப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இரண்டு பேர் தரிசனம் செய்ய வந்தால், 100 ரூபாய்க்கு ரசீது கொடுத்துவிட்டு, அதன் பின்னால் 2 என்று எழுதிக் கொடுப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பக்தர்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில், ஈடுபட்ட காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: New Year 2025 : பிறந்தது புத்தாண்டு... தஞ்சையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு
குற்றச்சாட்டுகள் என்ன ?
இது தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தினேஷ் மற்றும் டில்லிபாபு நம்மிடம் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். இருபது ரூபாய் நுழைவு கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் கொடுக்கும் போது வெளிப்படை தன்மையுடன் இருக்கிறது. எத்தனை பேர் எவ்வளவு ரூபாய் என வெளிப்படையாக அந்த ரசீதில் பதிவாகி இருக்கிறது.
ஆனால் 100 ரூபாய் கட்டணம் தரிசன டிக்கெட்டில் எந்தவித, விவரமும் சரியாக இல்லை. எவ்வளவு டிக்கெட்கள் வாங்கினாலும் ஒரே டிக்கெட் தான் கொடுக்கிறார்கள். ஒரு சில டிக்கெட்களில் பின்பகுதியில், எத்தனை பேர் என எழுதிக் கொடுக்கிறார்கள். 28ஆம் தேதி கோயிலுக்கு சென்று இருந்த போது, கோயில் முத்திரைகளை தவறான முறையில் பயன்படுத்தி இருந்தது தெரியவந்தது. இருபது ரூபாய் டிக்கெட்டில் அனைத்தும் தெளிவாக இருக்கும் போது, 100 ரூபாய் டிக்கெட்டில் ஏன் எந்தவித தெளிவும் இல்லாமல் இருக்கிறது, என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: Mettur Dam: புத்தாண்டில் ஒரு ஹாப்பி நியூஸ்... முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை..
இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன் நம்மிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கட்டண தரிசனம் என்பது இருக்கவே கூடாது என்பது எங்களது நிலைப்பாடாக உள்ளது. கோயிலைப் பொறுத்தவரை பக்தர்கள் சரிசமமாக பார்க்க வேண்டும்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், 100 ரூபாய் டிக்கெட் விவகாரம் தொடர்பாக பக்தர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் தவறு செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். உடனடியாக காஞ்சிபுரம் ஏகாம்நாதர் கோயிலில், நடைமுறையில் உள்ள கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டபோது, தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்தால், அதனை வெளியிட ஏபிபி நாடு செய்தி நிறுவனம் தயாராக உள்ளது.