Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
அன்புமணி தான் பாமக தலைவர் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்த நிலையில், அந்த முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை அங்கீகரித்து சமீபத்தில் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ் தரப்பு, தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனு
அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக அங்கீகரித்து, சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இது, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ராமதாஸ் வட்டாரம் பரபரப்பான நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை சட்டரீதியாக அணுகுவோம் என ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தங்களது தரப்பு அளித்த அசல் ஆவணங்களை ஆய்வு செய்யாமல், இந்திய தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம்
சமீப காலமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பதவிப் போட்டியால் பாமக தொண்டர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ள நிலையில், பாமகவிற்கு தானே தலைவர் என்றும், தங்களுடைய தரப்பிற்கு கட்சியின் சின்னமான மாம்பழத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பிய இந்திய தேர்தல் ஆணையம், அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ராமதாஸ் தரப்பை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் ஏற்கனவே பாமக தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ராமதாஸ் தரப்பிலும், அன்புமணி தரப்பிலும் என நிர்வாகிகள் பிரிந்து கிடக்கின்றனர். இதில் அன்புமணி பக்கம் தான் நிறைய நிர்வாகிகள் உள்ளனர். இப்படிப்பபட்ட சூழலில் தான், தற்போது தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
பாமக விவகாரம் டெல்லி நீதிமன்றம் வரை சென்றதால், தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.





















