APIIC Chief Update | முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியால், நடிகை ரோஜாவின் பதவி பறிப்பு..!
ரோஜாவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்ததை அறிந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (ஏபிஐஐசி) தலைவர் பதவியை வழங்கினார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவான நடிகை ரோஜாவின் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பதவி பறிக்கப்பட்டதால், அவரது தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆந்திராவில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் அக்கட்சியை சேர்ந்த சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா. அம்மாநில அமைச்சரவையில் ரோஜா சேர்க்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதனால், ரோஜாவின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்ததை அறிந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (ஏபிஐஐசி) தலைவர் பதவியை வழங்கினார்.
இந்த நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் முடிவு செய்ததால், எம்எல்ஏக்கள் வகித்து வந்த பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. அதில் எம்எல்ஏ ரோஜா வகித்து வந்த ஆந்திர மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்கு மேட்டு கோவிந்த ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களில், ரோஜாவின் ஆதரவால் களமிறக்கப்பட்ட புத்தூர் மற்றும் நகரி நகராட்சிகளின் பல வார்டுகளில் வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தனர். இதனால், நகரியின் முன்னாள் நகராட்சித் தலைவரான சாந்தி குமார் கடந்த ஆண்டு மாநில எடிகா கார்ப்பரேஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். இது, ரோஜாவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கட்டத்தில், ரோஜாவை ஏபிஐஐசி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவால், ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவர் எம்.சி. விஜயானந்த ரெட்டி, ஏபிஎஸ்ஆர்டிசி நெல்லூர் மண்டலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். நெல்லூர், புத்தலப்பட்டு மற்றும் சித்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் செல்வாக்கு மிக்கவரான ரெட்டி, 2019 தேர்தலில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு மண்டலங்களின் மற்றொரு முக்கிய தலைவரான ஷமீம் அஸ்லம், ஏ.பி.எம்.டி.சி.யின் தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவரான கட்சியின் மூத்த செயல்பாட்டாளர் பீரேந்திர ராஜு, ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரர் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார், மேலும் முன்னாள் எம்.பி. ஞானேந்திர ரெட்டியின் உறவினர் பிரமீலா ரெட்டி கானிபகம் கோயில் தேவஸ்தானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என ஜெகன்மோகன் பதவியேற்பு விழாவின்போது கூறியிருந்தார். அதன்படி அடுத்து வரக்கூடிய இரண்டரை ஆண்டுகளுக்கு விரைவில் மாற்றி அமைக்கக்கூடிய அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.
Kadambini Ganguly | இன்று கூகுள், டூடுல் போட்டுக் கொண்டாடும் கடம்பினி கங்குலி யார் தெரியுமா?