Kadambini Ganguly | இன்று கூகுள், டூடுல் போட்டுக் கொண்டாடும் கடம்பினி கங்குலி யார் தெரியுமா?
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலியைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் கடம்பினி கங்குலியைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அவரின் வாழ்க்கையையும் பணியையும் கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த டூடுளை வெளியிட்டுள்ளது.
யார் இந்த கடம்பினி கங்குலி?
தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவர் என்ற பெருமையைப் பெற்ற கடம்பினி கடந்த ஜூலை 18, 1861 ஆம் ஆண்டு பிஹார் மாநிலம் பகல்பூரில் பிறந்தார். இவருடைய தந்தை, தந்தை பள்ளித் தலைமை ஆசிரியர். பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதியாக இருந்தார். பெண் கல்வியை தீவிரமாக ஆதரித்தார். அதனாலேயே மகளையும் நன்கு படிக்க வைத்தார். தந்தை காட்டிய வழியில் கடம்பினி நன்றாக கல்வி கற்றார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், கொல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இத்தேர்வில் வென்ற முதல் பெண் இவர்தான். இங்கு இவரும், சந்திரமுகி பாசு என்பவரும் பட்டப்படிப்பை முடித்து இந்தியாவில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள் என்ற பெருமையைப் பெற்றனர்.
இவர் கடந்த 1884 ஆன் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் இணைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி எட்டாக்கணியாக இருந்த நிலையில், பெண்ணாக இவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தேசிய அளவில் கவனம் பெற்றது.
கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டு அவர் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கணவரும் சீர்திருத்தவாதி. அதனால் மனைவியின் கல்விக்கு உற்ற துணையாக இருந்தார்.
1886-ல் ‘ஜிபிஎம்சி’ (பெங்கால் மருத்துவக் கல்லூரி பட்டதாரி) பட்டம் பெற்று, ஐரோப்பிய மருத்துவம் மேற்கொள்ள தகுதி பெற்றார். 1893-ல் லண்டன் சென்றார். அங்கு ராயல் காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ், ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் கல்லூரிகளில் பயின்றார். மகப்பேறு, குழந்தை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். தாயகம் திரும்பிய அவருக்கு நேபாள மகாராணிக்கு மருத்துவம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரது மருத்துவத்தில் மகாராணி குணமடைந்தார். இதையடுத்து அரச குடும்பத்தினரின் சிறப்பு மருத்துவரானார். மருத்துவராகவும் 8 குழந்தைகளின் தாயாகவும் சிறப்பாக வாழ்க்கையை நடத்திவந்தார். அதேவேளை, பெண்கள் முன்னேற்றத்துக்காக போராடினார். தென்னாப்பிரிக்க இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டத்தில் முதல் பெண் குரல்:
இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது, அதன் மகளிர் பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய முதல் பெண் என்ற பெருமை பெற்றார். மருத்துவத் தொழிலை தனது மூச்சாக மக்கள் சேவையை தனது இலக்காக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்த கடம்பினி கங்குலி தனது 62-வது வயதில் (1923) இயற்கை எய்தினார். இந்நிலையில் அவருடைய 160-வது பிறந்த நாளை ஒட்டி அவரை கூகுள் கவுரப்படுத்தி டூடுள் வெளியிட்டுள்ளது.