Independence Day Speech: 77வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் நீண்ட நேரம் உரையாற்றிய பிரதமர் யார் தெரியுமா?
Independence Day Speech: பிரதமர் மோடி இன்று 10வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
ஒட்டுமொத்த இந்திய நாடும் இன்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் நாள் 77வது சுதந்திர தினத்தை கோலாகளமக கொண்டாடி வருகிறது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் தேசிய கொடியை ஏற்றிய பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று 10வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 10 முறை தேசியக் கொடி ஏற்றி உரையாற்றியுள்ளார். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார் பிரதமர் மோடி.
சுதந்திர தின உரையைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளும் கவனிக்கும் விஷயமாக உள்ளது. இந்நிலையில், சுதந்திரதினத்தில் அதிக நேரம் உரையாற்றியவர் என்றால் அது தற்போதைய பிரதமர் மோடிதான். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நாட்டின் 72வது சுதந்திர தினத்தில் மொத்தம் 80 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் ஆற்றிய உரை என்பதால் மிகவும் கவனம் பெற்றது. அதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்று தனது முதல் சுதந்திர தின உரையை 65 நிமிடங்கள் ஆற்றினார்.
ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி 86 நிமிடங்களிலும், 2016ஆம் ஆண்டு 96 நிமிடங்களும் என மிக நீண்ட நேர உரையாற்றினார். இதுதான் இந்திய பிரதமர் ஒருவரின் நீண்ட நேர சுதந்திர தின உரையாக உள்ளது.
இந்நிலையில் 77வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து விட்டு பிரதமர் மோடி 89 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். இது இவரது மிக நீண்ட உரைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் மிக நீண்ட உரை இருப்பதாகவும் அதன் நேரத்தை குறைக்கவும் பல கடிதங்கள் வந்ததாகவும் அதனால் உரையின் நேரத்தை குறைக்க முயற்சிப்பதாகவும் ”மான் கீ பாத்” நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். அந்த ஆண்டு மட்டும் பிரதமர் மோடி 57 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 50 நிமிடங்கள் உரை என்ற கணக்கில் பேசி வந்தார். அதிலும், 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் மட்டும் 50 நிமிடங்களுக்கு மேலாக கால அளவில் உரையாற்றினார். மற்றபடி, மன்மோகன் சிங் தனது உரையை 32 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை உரையாற்றினார். அதேபோல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தனது சுதந்திர தின உரையை 30 நிமிடங்கள் முதல் 35 நிமிடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.