Coromandel Express Accident: கோரமண்டல் விரைவு ரயில் சென்ற லூப் லைன்..! அப்படி என்றால் என்ன, அதனால்தான் விபத்தா?
ஒடிசாவில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் பயணிகள் விரைவு ரயில் தவறான பாதையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Coromandel Express Accident: கோரமண்டல் விரைவு ரயில் சென்ற லூப் லைன்..! அப்படி என்றால் என்ன, அதனால்தான் விபத்தா? What is a loop line that Coromandel Express wrongly took in odisha train accident Coromandel Express Accident: கோரமண்டல் விரைவு ரயில் சென்ற லூப் லைன்..! அப்படி என்றால் என்ன, அதனால்தான் விபத்தா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/03/9c244d60a057f07c9b8cf06edfab22621685786743618732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒடிசாவில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் பயணிகள் விரைவு ரயில் தவறான பாதையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெயின் லைன் தடத்தில் இருந்து லூப் லைன் தடத்தில் ரயில் சென்றதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணை:
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நேர்ந்த கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
சிக்னல் கோளாறு காரணமா?
இந்நிலையில் ”சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக அதை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் உடனடியாக சிக்னல் ரத்து செய்யப்பட்டதால் அவசர கதியில் லூப் லைனுக்கு சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிவேகமாக சென்ற கோரமண்டல் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு முன்னதாகவே ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலானது தடம்புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக விபத்திற்கு மனித பிழைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது” தெரிய வந்துள்ளது. அதேநேரம், இந்த சம்பவம் நிகழ்வதற்கு முக்கிய காரணம் மனித பிழையா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
லூப் லைன் என்றால் என்ன?
வழக்கமாக ரயில்கள் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் முதன்மையான பாதைகள் மெயின் லைன் என அழைக்கப்படுகிறது. அதே நேரம், அதிகப்படியான ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் கூடுதல் பாதை தான் லூப் லைன் என குறிப்பிடப்படுகிறது. அதன்படி, மெயின் லைனில் இருந்து தண்டவாளப் பாத விலகி தனி வழியில் பயணித்துசிறிது தூரத்திற்குப் பின் மீண்டும் மெயின் லைனில் இணைந்துவிடும். இதற்கு பெயர் தான் லூப் லைன் எனப்படும். இதன் மூலம் பயணிகள் ரயில், ரயில் நிலையத்தில் நிற்பதற்கான இடவசதி ஏற்படுத்த முடிகிறது. 750 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இந்த லூப் லைன்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஜின்களுடன் கூடிய ஒரு சரக்கு வாகனத்தை கூட நிறுத்த முடியும். அதேநேரம், தற்போது இந்தியாவில் 1500 மீட்டர் நீளத்திலான லூப் லைன் தான் கட்டமைக்கப்படுகிறது. இது வழக்கமான லூப் லைனை காட்டிலும் இரண்டு மடங்கு நீளமானதாகும்.
திரும்புமா விரைவு ரயில் சேவை?
இத்தகைய லூப் லைனில் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலின் மீது தான், அதிவேகமாக வந்த கோரமண்டல் பயணிகள் விரைவு ரயில் தவறான சிக்னல் காரணமாக மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அங்கு மீட்பு பணிகள் முடிவுற்ற நிலையில், உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றி ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. விபத்து காரணமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் 51 ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)