‘தடுப்பூசி திருவிழா’ வந்தும் மாறாத எண்ணிக்கை.. தயக்கத்துக்கு என்ன காரணம்?
இந்தியாவில் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி மிகவும் குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நாளைக்கு சராசரியாக 40 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அதுவே அடுத்த நாளில் 20 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கடந்த 15 நாட்களாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திருவிழாவான ‘திகா உத்சவ்’ என்ற நிகழ்வை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திருவிழா தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தரவுகளின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
அதன்படி இந்தியாவில் கடந்த 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்குவதற்கு முன்பு வரை ஒரு நாளைக்கு 33.47 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவே தடுப்பூசி திருவிழா தொடங்கிய பிறகு 31.38 லட்சமாக குறைந்துள்ளது.
மேலும் கடந்த 17ஆம் தேதி வரை இந்தியாவில் மொத்தமாக தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 12.26 கோடியாக உள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7.71 சதவிகிதம் ஆகும். இதன்மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இப்பட்டியலில் இஸ்ரேல்(61.73), அமெரிக்கா(38.72), பஹரேன்(34.78) முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
அதேபோல் மாநிலங்களுள் இடையேயும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் வித்தியாசமாக உள்ளது. உதாரணமாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவும் கேரளா மாநிலத்தில் சராசரியாக 7 சதவிகித மக்கள் மட்டுமே ஒரு தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
இந்தச் சூழலில் வேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த 2 மாதங்களுக்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது சராசரியாக இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒரு கோடி தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எனினும் இந்தியாவில் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்துவோரின் சராசரி மிகவும் குறைந்து காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நாளைக்கு சராசரியாக 40 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டால், அதுவே அடுத்த நாளில் 20 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகிறது. இத்தகைய தினசரி மாறுபாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களுக்கு ஏதுவாக நடத்தப்பட்ட தடுப்பூசி திருவிழா இன்னும் சரியாக மக்களிடம் செல்லவில்லை என்பது இந்த தரவுகளின் மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே மத்திய மாநில அரசு மக்களிடம் தடுப்பூசி தொடர்பாக இருக்கும் அச்சத்தை போக்கி விரைவில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.