”மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுப்போம்” - பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி
பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப் பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்று மத்திய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், அடுத்த புதன் கிழமை இந்த விவகாரம் எந்த வகையிலும் தள்ளிப்போகக் கூடாது என்று குறிப்பிட்டு ஒத்திவைத்தது. இதனால் பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு இந்த விவகாரம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டிய நிலையில் தேவையில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார் என்று தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஒவ்வொரு முறையும் ஆளுநர் ஏதாவது ஒரு விளக்கம் கேட்டு முடிவு எடுக்க தாமதப்படுத்துகிறார் என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதனையடுத்து, பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது தானே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் நடராஜன், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டு நடப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செயல்படுங்கள் என்று ஆளுநருக்கு யாரும் அழுத்தம் தரமுடியாது இது மத்திய புலனாய்வு கையாண்ட விவகாரம். இதில் கருணை காட்ட வேண்டும் என்றாலோ முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலோ அது மத்திய அரசின் வசம் தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுப்பார். தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதன்படி தான் நடக்கும் என்று வாதிட்டார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக இதுவரை ஏன் முடிவெடுக்கவில்லை. முடிவெடுக்க ஏன் கால தாமதம் ஏற்படுகிறது? பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்கும் பிரச்சனையில் ஏன் மத்திய அரசு தலையிருகிறது? குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்கள் எங்கே? பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். அதன் நிலமை என்ன? விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருக்கும்போது ஆளுநர் ஏன் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? என்று சரமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி தத்துவம் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என்று மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என்று கூறினர்.
மேலும், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறைக் காட்டவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதிகள் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நிலை, அதிகாரப் பிரச்சனையை கருத்தில் கொண்டு பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று கேள்வினர். மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று கூறியதோடு, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
பேரறிவாளன் விடுதலை விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேரறிவாளனை குடியரசுத் தலைவர் விடுவிக்கவோ, அல்லது தீர்மானத்தை திருப்பியனுப்பவோ வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.