Delhi murder case: ஷ்ரத்தாவுடன் சண்டையிட்ட அப்தாப்...வெளியான அதிர்ச்சி ஆடியோ கிளிப்...!
நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கின் நோக்கத்தை கண்டறிய இந்த முக்கிய ஆதாரம் உதவும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக ஒரு அதிர்ச்சி ஆடியோ கிளிப் வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறைக்கு கிடைத்த அந்த ஆடியோவில் ஷ்ரத்தாவுடன் அப்தாப் சண்டையிட்டு கொள்வது போல பதிவாகியுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கின் நோக்கத்தை கண்டறிய இந்த முக்கிய ஆதாரம் உதவும் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு, மத்திய புலனாய்வு அமைப்பின் தடயவியல் குழு, அப்தாபின் குரல் மாதிரியை சேகரிக்க உள்ளது. அதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள ஆடியோ கிளிப்பில் உள்ள குரல் அப்தாபின் குரலா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
கடந்த வெள்ளிக்கிழமை, அப்தாபின் நீதிமன்ற காவலை நீதிமன்றம் 14 நாட்கள் நீட்டித்தது. நவம்பர் 26 முதல் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் அப்தாப் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்ற விசாரணையின்போது, அப்தாபின் குரல் மாதிரியை சோதனை செய்தவற்கு அவரின் ஒப்புதல் தேவை என அவர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்தார்.
ஆனால், நார்கோ, பிரைன் மேப்பிங் மற்றும் பாலிகிராஃப் சோதனைகளுக்கு மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் தேவை எனக் கூறி அப்தாப் தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
தேசிய தலைநகரில் உள்ள சிபிஐயின் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஃப்எஸ்எல்) குரல் மாதிரி சோதனை நடத்தப்பட உள்ளது.
ஷ்ரத்தாவும் அப்தாப்பும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அப்தாபே ஷ்ரத்தாவை கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்துள்ளார்.
காவல்துறை கண்டுபிடித்துவிடுமோ என எண்ணி ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை அப்தாப் எரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
"எப்படி கொலை செய்ய வேண்டும், அதை எப்படி மறைக்க வேண்டும் என்பதை அப்தாப் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார். விசாரணையின்போது, இதை அப்தாபே தெரிவித்துள்ளார்" என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அப்தாப் தவறான தகவல்களை அளித்து விசாரணையை திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்த தெற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், அவருக்கு பாலிகிராஃப் மற்றும் நார்கோ சோதனை நடத்தப்பட்டது.
அதில், தனது காதலியான ஷ்ரத்தாவை கொன்றதாக ஆப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கொலை செய்த பிறகு, அதை நினைத்து அவர் வருத்தப்படவில்லை என சோதனை நடத்திய குழுவில் இடம்பெற்றவர்கள் தகவல் தெரிவித்திருந்தனர்.