தொடர்ந்து பதற்றம்! முன்னாள் முதலமைச்சர் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் மரணம்
மணிப்பூர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர். இந்த மாநிலத்தில் கடந்த ஒரு வருடமாக நடைபெறும் இட ஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட கலவரத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்:
மணிப்பூரில் இன்னும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், நேற்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதல் முதலமைச்சருமான மைரேம்பம் கொய்ரேங் சிங் வீட்டின் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று மாலை நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் ஆர்.கே.ராபெய்சிங் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். முதலமைச்சர் வீட்டின் அருகே மதச்சடங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த துயரச் சம்பவத்தில் முன்னாள் முதலமைச்சரின் உறவினர்கள் 5 பேர் பரிதாபமாக காயம் அடைந்தனர்.
தொடரும் பதற்றம்:
மேலும், ட்ராங்லாபோய் கிராமத்தில் அதிகாலை 4 மணியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்ட மொய்ராங் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் குகி இன மக்கள் அதிகளவில் வசிக்கும் சூராசந்த்பூர் மலைப்பகுதிகளில் இருந்து ஏவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி – மெய்தி இன மக்கள் இடையே கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வரும் மோதலுக்கு அமைதி வழியில் விரைவில் தீர்வு காண வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அங்கு தொடர்ந்து நடந்து வரும் மோதல்கள், கலவரத்தால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவது நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.