Vande Bharat: சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாட்டில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Vande Bharat: நாட்டில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தேபாரத் ரயில் சேவை:
உலகத்தரத்தில் அதிவேகமான ரயில்சேவை என்ற நோக்கில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, வந்தே பாரத் ரயில்களின் சேவையை வழங்கி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவையும் அடங்கும்.
#WATCH | Prime Minister Narendra Modi virtually flags off nine Vande Bharat Express trains, to help improve connectivity across 11 states namely Rajasthan, Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Karnataka, Bihar, West Bengal, Kerala, Odisha, Jharkhand and Gujarat. pic.twitter.com/3R3XpUhEVQ
— ANI (@ANI) September 24, 2023
9 வந்தே பாரத் ரயில்கள்:
அதன்படி, உதய்பூரில் இருந்து ஜெய்ப்பூர் இடையே இயக்கப்படவுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு வரையும் ஒரு வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இத்துடன் விஜயவாடாவில் இருந்து ரேணிகுண்டா வழியாக சென்னை வரையில் மற்றொரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. மேலும் பாட்னாவில் இருந்து ஹவுரா வரையும், கேரள மாநிலத்தின் காசர்கோடில் இருந்து திருவனந்தபுரம் வரையிலும், ரூர்கேலா முதல் புவனேஸ்வர் வழியாக பூரி வரையிலும், ராஞ்சியில் இருந்து ஹவுரா வரையிலும் மற்றும் ஜாம்நகர் முதல் அகமதாபாத் வரையிலும், தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை வரை இயக்கப்படவுள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் ஏற்கனவே, மைசூரு - சென்னை மற்றும் கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. அந்த வரிசையில் மூன்றாவது ரயில் சேவையாக சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவை தொடங்கப்பட்டது.
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை:
வழக்கமாக நெல்லை - சென்னை இடையேயான 650 கிலோ மீட்டர் தூரத்தை ரயிலில் கடக்க 10 மணி நேரமாகும். ஆனால், புதிய வந்தே பாரத் ரயில் ஆனது, இந்த தூரத்தை வெறும் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இந்த ரயில் பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் வழக்கமான ரயில் டிக்கெட்டிற்கானதை விட அதிகமாகவும், அதேநேரம் பேருந்து டிக்கெட் கட்டணத்திற்கு இணையானதாகவும் உள்ளது. அதன்படி, ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய் ஆகும்.