5G Services In India : 5G சேவையை தொடங்கிவைத்த பிரதமர்.. அடுத்த மாதம் எத்தனை நகரங்களில்? நச்சுன்னு சில பாய்ண்ட்ஸ்
பிரதமர் மோடி பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கங்களுக்கு சென்று 5ஜி சேவை குறித்தும், அதன் மூலம் இயங்கும் கருவிகள் குறித்தும் பார்வையிட்டார்
டெல்லியில் இன்று நடைபெற்ற டெலிகாம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 இன் 6வது பதிப்பின் முதல் நாள் விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தீபாவளிக்கு பிறகு 13 பெரிய இந்திய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியைத் திறந்து வைத்த பிறகு, பிரதமர் மோடி பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கங்களுக்கு சென்று 5ஜி சேவை குறித்தும், அதன் மூலம் இயங்கும் தொழில்நுட்ப கருவிகள் குறித்தும் பார்வையிட்டார். ரிலைன்ஸில் இருந்து துவங்கிய பிரதமர் மோடி பின்னர் ஏர்டெல், வோடபோன் ஐடியா, சி-டாட் மற்றும் பிற நிறுவனங்களின் ஸ்டால்களைப் பார்வையிட்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி, பார்தி ஏர்டெல்லின் சுனில் பார்தி மிட்டல் மற்றும் வோடபோன் ஐடியாவின் குமார் மங்கலம் பிர்லா ஆகியோருடன் இணைந்து, 5G தொழில்நுட்பம் மூலம் உள்நாட்டில் ஏற்படும் வளார்ச்சி குறித்து விவாதித்தார்.
5ஜி மூலம் துல்லியமான ட்ரோன் அடிப்படையிலான விவசாயம், உயர்-பாதுகாப்பு ரவுட்டர்கள் மற்றும் AI அடிப்படையிலான இணைய அச்சுறுத்தல் கண்டறிதல் தளங்கள், தானியங்கி வழிகாட்டுதல் வாகனங்கள், அம்புபாட் - ஸ்மார்ட் ஆம்புலன்ஸ், ஆக்மென்ட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி போன்றவை பார்வைக்காக வைக்கப்படிருந்தன. அதே போல கல்வி மற்றும் திறன் மேம்பாடு, கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு, ஸ்மார்ட்-அக்ரி திட்டம், சுகாதார நோய் கண்டறிதல் போன்றவையும் இடம்பெற்றிருந்தன. அவற்றையும் மோடி பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியானது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் தொழில்நுட்ப மன்றம் எனக் கூறும் இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC), தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.5ஜி தொழில்நுட்பம் இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இது 2023 மற்றும் 2040 க்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ₹ 36.4 டிரில்லியன் ($455 பில்லியன்) பயனளிக்கும் என்று மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சேவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைவரையும் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி சேவையானது நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய காலத்தில் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீத கவரேஜ் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.