நடுநிலை வகிக்கவில்லை... உக்ரைன் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நிலைபாடு குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்..!
அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு பிரதமர் மோடி நேர்காணல் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்க, இந்திய இரு நாட்டு உறவில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உக்ரைன் விவகாரம்:
இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு பிரதமர் மோடி நேர்காணல் அளித்துள்ளார். அப்போது, உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக இந்தியா தீர்க்கமான நிலைபாடு எடுக்காதது, அமெரிக்க - இந்திய உறவு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வெளிப்படையான பதில் அளித்துள்ளார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக தீர்க்கமான நிலைபாடு எடுக்காததால் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மோடி, "இந்த வகையான கருத்து அமெரிக்காவில் பரவலாக இருப்பதாக நான் நினைக்கவில்லை
இந்தியாவின் நிலைப்பாடு பற்றி உலக நாடுகள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர், புரிந்து கொண்டுள்ளனர் என நான் நினைக்கிறேன். இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதிதான் என்பதில் உலகம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது. நாங்கள் நடுநிலையாக இருக்கிறோம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் நடுநிலை வகிக்கவில்லை. நாங்கள் அமைதியின் பக்கம் இருக்கிறோம்.
அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்தையும், மற்ற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். சச்சரவுகளை ராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். போர் மூலம் அல்ல" என்றார்.
அமெரிக்க - இந்திய உறவு:
இந்திய, அமெரிக்க உறவில் நம்பிக்கை தெரிவித்துள்ள மோடி, "இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புதுறையில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு அமெரிக்க, இந்திய நல்லுறவில் முக்கிய தூணாக உள்ளது. இதுவே, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றுக்கு விரிவடைந்துள்ளது.
இந்தியா, பன்முகத்தன்மையை சகித்துக்கொள்வது மட்டுமல்லாமல் கொண்டாடுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்கள் அமைதியாகவும், செழிப்பாகவும் வாழ சுதந்திரம் பெற்ற பூமியாக இந்தியா உள்ளது. உலகில் உள்ள அனைத்து மதத்தினரும் இந்தியாவில் ஒற்றுமையாக வாழ்வதை நீங்கள் காணலாம்" என்றார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் குறித்து பேசிய பிரதமர் மோடி, "பலமுனை உலக ஒழுங்கு அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தங்களை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். உலகின் குறைந்த செல்வந்த நாடுகளின் பிரதிநிதிகளாக ஆக்குங்கள்" என்றார்.
இந்திய சீன உறவு குறித்து பேசிய அவர், "இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் அமைதி நிலவினால் மட்டுமே உறவில் முன்னேற்றம் ஏற்படும். சீனாவுடனான இயல்பான இருதரப்பு உறவுகளுக்கு, எல்லைப் பகுதிகளில் அமைதி அவசியம்" என்றார்.