PM poshan : மாறியது பெயர்.. பிரதமர் ஊட்டச்சத்து திட்டத்தில் கூடுதல் மாணவர்களுக்கு பயன்கள் நீட்டிப்பு
ஆரம்ப பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்கள் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்
மதிய உணவுத் திட்டத்துக்கு பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் (PM POSHAN - PM Poshan Shakti Nirman) என்று மத்திய அமைச்சரவை பெயர் மாற்றியமைத்துள்ளது.
மதிய உணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கு ஒரு முறைக்கு சமைத்த உணவு வழங்குப்பட்டு வந்தது. இதன்மூலம், நாடுமுழுவதிலும் உள்ள 11.80 கோடி மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.
தற்போது, மாற்றியமைக்கப்பட்ட பிரதமரின் ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ், நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 11.80 கோடி மாணவர்களோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், பால்வாடி மையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆரம்ப பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்கள் கூடுதலாக இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.
இத்திட்டத்துக்கு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை, மத்திய அரசு ரூ.54061.73 கோடியும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ரூ.31,733.17 கோடியும் செலவு செய்யும். உணவு தானியங்களுக்கான கூடுதல் செலவான ரூ.45,000 கோடியை மத்திய அரசு ஏற்கும். ஆகையால் இத்திட்டத்துக்கான பட்ஜெட் மதிப்பு ரூ. 1,30,794.90 கோடி என்று மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
முன்னதாக, 6 வயது வரையிலான குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் மாநிலம், யூனியன் பிரதேசங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுக்கான சேவை திட்டம் (ஐசிடிஎஸ்) அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ், அங்கன்வாடியின் மூலம் 0 முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து ,சுகாதாரம்,மனம் மற்றும் சமூக வளர்ச்சியினை மேம்படுத்துதப்பட்டு வந்தது.
ஐசிடிஎஸ் டூ பிரதமர் ஊட்டச்சத்து திட்டம்?:
இதுவரை பள்ளிக்கு வராத 3 – 6 வயது வரையிலானவர்கள் பள்ளிப் பாடம் படிப்பதற்கு புதிய முறையை தேசிய கல்விக் கொள்கை முன்னெடுத்தது. இதன்கீழ், முன்குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வியை வலியுறுத்தும் வகையில், தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது.
எனவே, இந்த புதிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப, நடுநிலைப் பள்ளிக்கு முந்தைய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. முன்னதாக, மத்திய அரசு (balvatikas) பால்வதிகாஸ் என்ற தொடக்கப்பள்ளியை நிறுவியது.
மேலும், இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் பள்ளிகளுக்கு நேரடியாக பண பரிமாற்றம் செய்யப்படுவதால் வருவாய் இழப்பு குறையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமரின் ஊட்டச்சத்துக்கான தேசிய திட்டத்தை,
i) சிறப்பு நிகழ்வுகள் / பண்டிகை காலங்களில் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் யோசனையும் ஊக்குவிக்கப்படும்.
ii.) பள்ளி குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் தோட்டங்கள் குறித்த முதல் அனுபவத்தை கொடுக்க, பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்களை வளர்க்கவும் அரசு ஊக்குவிக்கிறது. இந்த தோட்டங்களில் விளையும் பொருட்கள் கூடுதல் நுண்ணுாட்டச் சத்துக்கள் வழங்க பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஊட்டச்சத்து தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
iii.)அனைத்து மாவட்டங்களில் சமூக தணிக்கை திட்டம் கட்டாயமாக்கப்படுகிறது.
iv.)ரத்த சோகை அதிகம் உள்ள மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதற்கான சிறப்பு வசதியும் உருவாக்கப்படுகிறது.
v.) உள்ளூரில் விளையும் காய்கறிகள் மற்றும் பொருட்களை வைத்து புதுமையான உணவுகளை தயாரிக்க கிராமங்கள் அளவில், தேசிய அளவில் உணவு சமைக்கும் போட்டிகளும் ஊக்குவிக்கப்படும்.
vi.) தற்சார்பு இந்தியாவுக்கு உள்ளூர் பொருட்கள்: இத்திட்டத்தை அமல்படுத்துவதில் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO) மற்றும் பெண்கள் சுய உதவிக் குழுவினரின் ஈடுபாடு ஊக்குவிக்கப்படும். உள்ளூர் பாரம்பரிய உணவுப் பொருட்கள் பயன்பாடு மூலம், உள்ளூர் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும்.
vii.) முன்னேற்றத்தை கண்காணிக்க கள ஆய்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். பிரபல பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்கள் கள ஆய்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.