இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. புயலைக் கிளப்புமா பெகாசஸ் விவகாரம்.?
கொரோனா பரவல் இரண்டாம் அலைக்கு பிறகு, டெல்லியில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
நாட்டின் 17வது மக்களவையில் 6 வது கூட்டத்தொடர் இன்று டெல்லியில் தொடங்க உள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசு புதியதாக 29 மசோதாக்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அவற்றில் 3 மசோதாக்கள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டவை, கூட்டத்தொடர் தொடங்கிவிட்டால் 6 மாதங்களுக்குள் அவசரச்சட்டத்திற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அது காலாவதியாகிவிடும்.
மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளுக்கு எதிராக போராடுவதற்கான தடை சட்டம், டெல்லியில் காற்றுத்தர மேலாண்மை அமைப்பு அமைக்கும் அவசரச் சட்டத்திற்கு மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமான சூழலில் இருப்பதால், அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், அதற்கு நிரந்த தீர்வு காண்பதற்கும் சுய அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அதே சமயத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய அரசு தோல்வி, தடுப்பூசிகள் பற்றாக்குறை, தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பதில் ஏற்பட்ட சிக்கல், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, அதன் உற்பத்தி பணியில் தாமதம், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது போன்றவற்றை முக்கிய பிரச்சினையாக எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கொரோனா பரவலாலும், ஊரடங்காலும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டு வருவதையும், இந்தியாவில் முதன்முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 100க்கு விற்கப்படுவதையும், அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதையும் முக்கிய பிரச்சினையாக எழுப்ப உள்ளனர். இதுமட்டுமின்றி, ரபேல் போர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பிரச்சினையை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, மத்திய அரசுக்கு புதிய சிக்கலாக உருவாகியுள்ள பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் விவாதங்கள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்கள் மேகதாது அணை விவகார பிரச்சினை குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்த உள்ளனர்.
இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 20 அமர்வுகள் நடைபெற உள்ளது.