No Confidence Motion: மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்கட்சிகள்...நம்பிக்கையில்லா தீர்மானம் படு தோல்வி...!
மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.
No Confidence Motion: மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்:
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பதில் அளித்து பேசினார் பிரதமர் மோடி. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது பிரதமர் மோடி இரண்டே கால் மணி நேரம் பதிலளித்துள்ளார். அதாவது, மக்களவையில் மாலை 5.05 மணிக்கு பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, இரவு 7.20 மணி வரை உரையாற்றினார். பிரதமர் மோடி பேசி முடித்ததும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதால் தீர்மானத்திற்கு எதிராக குரல் எழவில்லை.
பிரதமர் மோடி பேசியது என்ன?
மக்களவையில் பிரதமர் மோடி பேசிதாவது, "அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. எனவே, நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது கவனம் நாட்டின் வளர்ச்சியில் இருக்க வேண்டும். இது காலத்தின் தேவை. கனவுகளை நனவாக்கும் ஆற்றல் நம் இளைஞர்களுக்கு உண்டு. ஊழலற்ற ஆட்சியை, லட்சியங்களையும், வாய்ப்புகளையும் நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளோம்.
நீங்கள் (எதிர்க்கட்சியினர்) ஏழைகளின் பசியைப் பற்றிக் கவலைப்படவில்லை. நீங்கள் அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். நீங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை. உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறீர்கள். எதிர்க்கட்சியினர் பீல்டிங் செட் செய்கின்றனர். ஆனால், இங்கிருந்து பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன. நாங்கள் சதம் அடித்துக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் நோ பால்களாக வீசுகின்றனர். நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர ஐந்து வருடங்கள் கால அவகாசம் வழங்கினேன். நீங்கள் ஏன் உங்களை தயார் செய்து கொள்ளவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "1999ஆம் ஆண்டு, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சரத் பவார் தலைமை தாங்கினார். 2003இல் சோனியா காந்தி தலைமை தாங்கினார். ஆனால், இந்த முறை ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு என்ன நடந்தது என்று பாருங்கள்? அவரின் கட்சியினரே அவரை பேச விடவில்லை.
"இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி”
என்ன நிர்பந்தம் என தெரியவில்லை. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏன் ஓரங்கட்டப்பட்டார்? கொல்கத்தாவில் (மம்தா) இருந்து அழைப்பு வந்திருக்கலாம். ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014ஆம் ஆண்டு நாட்டு மக்களின் ஆதரவோடு முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம். 2019ஆம் ஆண்டு, எங்களுக்கே மக்கள் மீண்டும் வாய்ப்பளித்தனர். 2014ஆம் ஆண்டை காட்டிலும் அதிக பலத்துடன் ஆட்சி அமைத்தோம். எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தியா கூட்டணி அல்ல; ஈகோ கூட்டணி. ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார் பிரதமர் மோடி.
1:30 மணி உரைக்கு பிறகு, மணிப்பூர் குறித்து பதில் அளித்த அவர், மணிப்பூருடன் நாடு துணை நிற்கிறது என்றும் விரைவில் அங்கு அமைதி திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.