"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமே இல்லாமல் சிகிச்சை அளிக்க மார்ச் மாதத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை அரசு கொண்டு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமே இல்லாமல் சிகிச்சை அளிக்க மார்ச் மாதத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை அரசு கொண்டு வரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கும் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.
தொடரும் சாலை விபத்துகள்:
2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் அதை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
"பணமே இல்லாமல் சிகிச்சை"
சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமே இல்லாமல் சிகிச்சை அளிக்க மார்ச் மாதத்துக்குள் மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தை அரசு கொண்டு வரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், "எந்தவொரு சாலையிலும் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனைத்து சாலை விபத்துகளுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும்.
காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தேசிய சுகாதார ஆணையம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும். இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், விபத்து நடந்த நாளிலிருந்து அதிகபட்சமாக 7 நாட்களுக்கு ஒரு நபருக்கு ஒரு விபத்துக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.