Madras HC questions Centre | 14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? - கோபம் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்
- மத்திய அரசு ஆலோசிக்கும் நிபுணர்கள் யார்? -14 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?- ஜூன் மாதத்தில் சரியாகிவிடும் என்பதுதான் பதிலா? சென்னை உயர்நீதிமன்றம் சராமரிக் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு கொரோனா தொடர்பான மருத்துவப் படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் மீதான வழக்கை தன்னிச்சையாக முன்வந்து விசாரித்தது.
‘இந்தியா கடந்த ஒருவருடம் முழுக்கவே லாக்டவுனில்தான் இருந்தது.அப்போதெல்லாம் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? ஏன் ஏப்ரலில்தான் அவசர அவசரமாக நமக்கான திட்டமிடல்களைச் செய்துவருகிறோம். நாம் எப்படியான நம்பிக்கையற்ற ஒரு நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை கவனியுங்கள்’ என மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் சங்கரநாராயணனிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு ’இரண்டாம் அலை எதிர்பாராதது, இருந்தும் மத்திய அரசு பேரிடர் கால நடவடிக்கைகளை எடுத்துவருகிறது’ என்று விளக்கமளித்தார் சங்கரநாராயணன்.
அவரது விளக்கத்துக்கு பதிலளித்த நீதிபதி,’எந்த மருத்துவரும் கொரோனா முற்றிலுமாக ஒழிந்துவிட்டது அதனால் நாம் எப்போதும் போலச் செயல்படலாம் என் சொல்லவில்லை.இந்த நிலையில் மத்திய அரசு எந்த நிபுணரிடம் கலந்தாலோசிக்கிறது எனத் தெரியவில்லை. அவசரக்காலத்தைச் சமாளிப்பதைவிட நிபுணர்கள் குழுவுடன் முன்கூட்டியே திட்டமிடுவதுதான் நமக்குத் தற்போதைய தேவை. ஆனால் ஜூன் மாதத்தில் நிலைமைச் சரியாகிவிடும் என்கிற விளக்கத்தைதான் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்றார்.
கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு என பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசை கொரோனா பேரிடர் மேலாண்மை குறித்துத் தொடர்ச்சியாக கேள்வியெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.