கேரளாவில் சாதி சான்றிதழ் சிக்கல்: 50 லட்சம் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியா?
1870-களில் மூணார் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தேனி, திருநெல்வேலி, மதுரைப் பகுதிகளில் இருந்த தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.
கேரளாவின் டுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள், தங்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதற்கு கேரள அரசிடம் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், 1950-ல் இங்கு பிறந்ததற்கான ஆவணங்களைக் கொண்டு வாருங்கள், தருகிறோம் என்று இல்லாத ஆவணங்களைக் கேட்டு அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாக வேதனைப்படுகின்றனர். அங்கு வாழ்ந்துவரும் தமிழர்கள் 1870-களில் மூணார் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, தேனி, திருநெல்வேலி, மதுரைப் பகுதிகளில் இருந்த தமிழ் மக்களை ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.
குறைந்த ஊதியம், அதிக வேலை, பாதுகாப்பில்லாத இருப்பிடம் என்று கொத்தடிமைகளாகக் கூட்டிச் செல்லப்பட்ட இந்த மக்கள்தான், காடுகளாக இருந்த மலையைத் தங்களின் கடும் உழைப்பால் தேயிலை தோட்டங்களாக மாற்றி, தற்போது பெரும் வருவாய் கொடுக்கும் மாவட்டமாக மாற்றியிருக்கிறார்கள். காலம் முழுக்க உழைத்து, உருக்குலைந்துபோன இவர்கள், தங்களின் பிள்ளைகளைப் படிக்கவைத்து நல்ல அந்தஸ்துடன் வாழ வேண்டும் என நினைக்கும் நிலையில், அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கொடுக்க மறுப்பதால், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
இந்த நிலையில், கேரளாவுக்கு புலம்பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான திருத்தத்தை விரைவாக மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும்,'' என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு குடிபெயர்ந்து பல ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர். கடந்த 1950க்கு முன்பாக கேரளாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமே ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு வகுத்து இருக்கிறது. இதன் காரணமாக, கேரளாவில் வசிக்கும் தமிழ் பேசும் மொழி ரீதியிலான சிறுபான்மையினருக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த விதியில் திருத்தம் கொண்டு வரக்கோரி, நடுவட்டம் கோபாலா கிருஷ்ணன் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதில், 1950க்கு பதில், 1970, ஜன1 வரை புலம்பெயர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ., ராஜா கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர், கடந்த, 1950க்கு முன்பாக பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு நிரந்தரமாக புலம் பெயர்ந்த தமிழ் பேசும் சிறுபான்மையினருக்கு மட்டுமே, தற்போதுள்ள விதிகளின் படி ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர், கொச்சின் மற்றும் மதராஸ் மாகாணங்களாக இருந்தபோது, அதாவது 1950க்கு முன்பாக யாரெல்லாம் கேரளாவுக்கு புலம் பெயர்ந்து நிரந்தரமாக குடிபெயர்ந்தனர் என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே, தற்போதுள்ள ஷரத்துகளை திருத்த விரிவாக சரிபார்க்க வேண்டி இருக்கிறது. மேலும், புலம்பெயர் விவகாரம் மத்திய அரசின் பட்டியலுக்குள் இருக்கிறது.
எனவே, குறிப்பிட்ட ஷரத்தை மத்திய அரசு மட்டுமே திருத்த முடியும். இது தொடர்பாக ஏப்16ல் நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்கான கருத்துருவை ஏற்படுத்த, அப்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி விரிவான கருத்துரு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும், ஆக., 26ல் இது குறித்து அமைச்சரவையில் விவாதித்தோம். அப்போது தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது குறித்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது என முடிவு எடுத்துள்ளோம். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.





















