ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன் : ஜெயின் ரிப்போர்ட் சொல்வது என்ன?
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில்தான் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்பி நாராயணனின் போராட்டக் குரலுக்கு இது மேலும் வலுசேர்த்துள்ளது.
யார் இந்த நம்பி நாராயணன்?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) பணியாற்றி கடந்த 2001-ல் ஓய்வு பெற்றவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். க்ரோயோஜெனிக் எனப்படும் திரவ எரிபொருள் தயாரிப்பு தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து பெற இந்தியா முயற்சித்தது. ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், ரஷ்யா தொழில்நுட்பப் பகிர்வில் பின்வாங்கியது. இதனையடுத்து இந்தியா தானாகவே திரவ எரிபொருளை உருவாக்க முயன்றது. 1970களின் ஆரம்ப காலத்தில், அப்துல் கலாம் குழுவில் பணியாற்றிய போது, ஏவுகனை திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்தார். இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு. ஆர். ராவ் ஆகியோரின் ஆதரவுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.
விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கிய மைல் கல்லான திரவ எரிபொருளை தயாரித்து திருப்புமுனையை ஏற்படுத்திய நம்பி நாராயணன், கடந்த 1994-ல் கைது செய்யப்பட்டார். இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாகவும் அந்த நாடுகளுக்காக உளவு பார்த்ததாகவும் கூறி கேரள போலீஸார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாலத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இஸ்ரோ க்ரியோஜெனிக் தொழில்நுட்பம் குறித்து சில ஆவணங்களை மட்டுமே வைத்துக் கொண்டு நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். அவருடன் விஞ்ஞானிகள் பி.சசிகுமார், கே.சந்திரசேகரன், ஒப்பந்ததாரம் எஸ்.கே.சர்மா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 4 ஆண்டு காலமாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நம்பி நாராயணன் ஏராளமான கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்.
சிபிஐ விசாரணையும் திருப்பமும்..
நம்பி நாராயணன் கைதுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரியவந்தது. இதனால், 1998ல் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், நம்பி நாராயணன் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதின் பின்னணியில் கேரளாவைச் சேர்ந்த 10 போலீஸ் அதிகாரிகளே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் சட்டப் போராட்டம் நடத்தினார். இதில் அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைத்தது. டி.கே.ஜெயின் இந்த விசாரணைக் குழுவின் தலைவரானார். நம்பி நாராயணன் உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வெளிநாட்டுச் சதி குறிப்பாக அமெரிக்க சதி இருக்கிறதா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளட்டது. அதன்படி, நம்பி நாராயணன் மீது போலியாக அடிப்படை ஆதாரமின்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. மரியம் ரஷீத் என்ற பெண்மணியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறித்து எங்குமே ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும் அது சட்டவிரோதமானது என்பது தெரியவந்துள்ளது. மேலும், இஸ்ரோ விஞ்ஞானிகள் மீது களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே சில தகவல்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டது என்றும் ஜெயின் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க சதி:
இந்தியாவுக்கு திரவ எரிபொருள் தொழில்நுட்பம் கிடைக்கக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, நம்பி நாராயணன் உள்ளிட்டோர் மேற்கொண்ட சாதனையைப் பொறுக்க முடியாமல் இப்படியொரு சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நம்பி நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகளை சிக்கவைக்க சிஐஏ இந்தியாவில் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒரு போலி உளவு புகாரை கட்டமைத்தது என்றும் கூறப்படுகிறது.