(Source: ECI/ABP News/ABP Majha)
Independence Day 2024: எதிரிகளைக் கலங்கடித்த 4 பெரும் புரட்சிகள்: சுதந்திர வரலாற்றின் மறக்கமுடியாத பசுமை பக்கங்கள்
இவர், அவர் என விரல்விட்டு எண்ண முடியாத அளவிற்கு இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர்களின் எண்ணிக்கை, கடலளவு நீண்டுக் கொண்டே போகும்.
சுதந்திர தினம் – ஒவ்வொரு நாட்டிற்கும் மிக முக்கியமானது. ஏனெனில், இன்று நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் செய்கின்றன வேலைகளுக்கும் பேசுகின்ற பேச்சுக்கும் உள்ள உரிமை என்பது இந்த சுதந்திரம் நமக்குக் கொடுத்ததுதான். எனவேதான், ஒவ்வொரு நாட்டின் குடிமகனுக்கும் அந்த நாட்டின் சுதந்திரத் தினம் மிக முக்கியமானது. அதிலும், இந்தியா போன்ற அகண்டு, நீண்டு இருக்கும் மிகப்பெரிய நாட்டிற்கு மிக, மிக முக்கியமானது. கோடிக்கணக்கான இந்தியர்கள், லட்சக்கணக்கான முன்கள நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தலைவர்களின் ரத்தத்தால் உருவானதுதான் இந்திய சுதந்திரம். இவர், அவர் என விரல்விட்டு எண்ண முடியாத அளவிற்கு இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர்களின் எண்ணிக்கை, கடலளவு நீண்டுக் கொண்டே போகும். அத்தகைய பெருமைமிகு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு என்பது, அப்போது வெள்ளையர்கள் எனும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தது முதலே வந்துவிட்டது.
முன் நின்ற தமிழகமும் வங்காளமும்:
தென்கோடியில் தமிழகமும், கிழக்கில் வங்காளமும் சுதந்திரப் போராட்டத்தில் முன்னோடிகள். அதிலும், அன்றைய அகண்ட தமிழகத்தில் ஆண், பெண் என பலர் தங்கள் இன்னுயிர் நீத்து, தங்களிடம் இருந்த ஆயுதங்களைக் கொண்டு வீரமுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தனர். ஆனால், ஆங்கிலயேர்களில் கடைசி 200 ஆண்டுகளில் நடைபெற்ற பல சுதந்திரப் போராட்டங்களில், சில போராட்டங்கள் இந்தியா முழுமையும் ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களின் தூக்கத்தை விரட்டி அடித்து, இங்கிலாந்தில் இருந்த தலைவர்களையும் கலங்க வைத்தது என்றால் மிகையில்லை. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த அந்தப் போராட்டங்களில், 4 முதன்மையான போராட்டங்களைப் பற்றி அதாவது ஆங்கிலேயனை ஓட வைத்த வைத்த அந்த நிகழ்வுகளின் ஓட்டத்திற்குள் செல்வோம்.
வேலூர் சிப்பாய் புரட்சி:
தமிழகத்தின் வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள் ஒன்றிணைந்து, தங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மத நடவடிக்கைகள், ஆடை கட்டுப்பாடுகள், ஓரவஞ்சனை செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து, பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக களமிறங்கினர். திடீரென நள்ளிரவில் புரட்சியை ஆரம்பித்து, வேலூர் கோட்டையை கைப்பற்றினர். 100-க்கும் மேற்பட்ட கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவு படைகள், அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால், அருகில் இருந்த ஆற்காடு கோட்டையில் இருந்து வந்த ஆங்கிலேயர்களின் பீரங்கிப் படையுடன் துணைக் கொண்டு, இந்த சிப்பாய் புரட்சி அடக்கப்பட்டது. ஆனால், ஒருநாளில் நடைபெற்ற இந்தப் புரட்சி, ஆங்கிலேயர்கள் அதாவது கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற பெரிய அளவிலான முதல் போராட்டமாக பார்க்கப்பட்டது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் வரை இந்த வேலூர் சிப்பாய் புரட்சி பரபரப்பாகப் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1857 – முதல் சுதந்திரப் போர்:
1857-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி நடைபெற்ற மீரட்டில் தொடங்கிய போராட்டம், ஆக்ரா, கான்பூர், லக்னோ, டெல்லி என வட இந்தியாவின் பல இடங்களுக்குப் பரவியது. இந்தப் போராட்டம் அடக்கப்பட்டாலும், அப்போதுவரை இந்தியாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பெரும் பிரச்சினையாக அமைந்தது. இந்தப் போராட்டம், மக்கள் மனதில் பெரிதும் பேசப்பட்டது. அதேபோல், இந்தியாவின் பல இடங்களில் இந்தப் போராட்டத்தின் தாக்கத்தால், கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புகளும் தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, பிரிட்டிஷ் அரசாங்கம், கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கட்ப்பாட்டை பறித்து, தங்களின் ஆளுமைக்கும் இந்தியாவை கொண்டு வந்து, கவர்னர் ஜெனரலை அமைத்து, நேரடி ஆட்சியை செய்ய ஆரம்பித்து இங்கிலாந்து அரசாங்கம். நூறாண்டுகளுக்கும் மேலான கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியைத் துரத்தி அடிக்க காரணமாக அமைந்ததால், இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர்.
1930- உப்பு சத்தியாகிரகம்:
உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மை இந்தியா முழுமைக்கும் எடுத்துக் காட்டி, இந்தியர்களின் சுயத்தை வெளிக்கொண்டு வந்து போராட வைத்த இயக்கம் உப்புச் சத்தியாகிரகம். 1930-ம் ஆண்டு, ஜனவரி 30-ம் தேதி தண்டி கடற்கரையை நோக்கி, மகாத்மா காந்தியடிகள் தொடங்கிய இந்த இயக்கத்தில் முதலில் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே பங்கேற்றனர். ஆனால், நாட்கள் நகர, நகர நூறு, ஆயிரமானது. ஆயிரம் லட்சமானது. லட்சம், பல லட்சங்கள் ஆனது. இதனால், 23 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரை நாடு முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில், ராஜாஜி தலைமையில், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப்போராட்டம் நடைபெற்று, தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. காந்தி உள்ளிட்ட பலரின் கைது நடவடிக்கையால் இந்தப் போராட்டம் முடிவடைந்தாலும், இதன் எதிரொலியாக, பிரிட்டிஷ் அரசாங்கம், காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்தைக்கு இணங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
1942- வெள்ளையனே வெளியேறு இயக்கம்:
1942-ம் ஆண்டு அன்றைய பம்பாயில் நடைபெற்ற அகில இந்தியா காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, செய் அல்லது செத்து மடி என்ற அடிப்படையில், இந்திய விடுதலைக்கான அறைகூவலை விடுத்தார் மகாத்மா காந்தி. ஒத்துழையாமை இயக்கம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்ற பெயரில் நாடு முழுவதும் இந்த இயக்கம் பரவியது. இதன் எதிரொலியாக, போராடிய தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் எழுந்த எழுச்சியும் புரட்சியும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை யோசிக்க செய்தது. அப்போது நடைபெற்று வந்த உலகப்போரும் இங்கிலாந்து அரசாங்கத்தை சிந்திக்கச் செய்தது. இந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், 1947-ம் ஆண்டிற்கான சுதந்திரத்திற்கு வழிவகுத்த முக்கியப் போராட்டங்களில் ஒன்று என்றால் மிகையில்லை.
எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ வழிமுறைகள் என ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் இந்தியாவின் விடுதலைக்குப் போராடினர். நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம், இத்தனை கோடி தியாகிகளின் தியாகத்தால் கிடைத்தது என்பதை நினைவில் ஏந்தது, நம்முடைய சுதந்திரத்தை சீர்கெடாமல் பாதுகாக்க உதவும் என்பதில் ஐயமில்லை.