11 AM Headlines: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம், காங்கிரஸ் அதிர்ச்சி - டாப் 10 செய்திகளின் ரவுண்ட்-அப்
11 AM Headlines: உள்ளூர் முதல் உலக நாடுகளை வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை 11 மணி தலைப்புச் செய்திகளாக காணலாம்.
புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - வானிலை மையம்
வடக்கு அந்தமான் கடல்பகுதியில் வரும் 22ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன்காரணமாக கேரளா மற்றும் மாஹே, லட்சத்தீவு, கர்நாடகாவில் மிதமான மழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெலங்கானாவில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.58,000-ஐ நெருங்கிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.7,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டி, ஒரு கிராம் 105 ரூபாயை எட்டியுள்ளது.
கவரப்பேட்டை ரயில் விபத்து - 20 பேருக்கு சம்மன்
கவரப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்தில், ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தண்டவாளத்தில் போல்டுகள் காணாமல் போனதாக கூறப்பட்ட விவகாரத்திலும், பொன்னேரி, கவரைப்பேட்டை பகுதியில் இரும்பு திருடர்கள், காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை. சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரயில்வே ஊழியர்களிடமும் விசாரணை நடத்த முடிவு.
டெல்லியில் தீ விபத்து - 2 பேர் உயிரிழப்பு
டெல்லி போலநாத் நகரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புகைமூட்டத்தால் 2 பேரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச இடைத்தேர்தல் - காங்கிரசுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு காஜியாபாத், அலிகார்க் தொகுதிகளை சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளது. மீதம் உள்ள 8 தொகுதிகளில் சமாஜ்வாடி போட்டியிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகுதிபங்கீடு பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்ராய் தெரிவித்துள்ளார்.
பணமோசடி வழக்கு - தமன்னாவிடம் விசாரணை
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ‘எச்பிஇசட் டோக்கன்’ என்கிற மொபைல் ஆப் சிக்கியுள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டு பணம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டதாகவும் தமன்னாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
77 ஆண்டுகளை வீணடித்துவிட்டோம் - நவாஸ் ஷெரிஃப்
இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் 77 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், “இரு நாடுகளுக்கு இடையேயான பழைய வரலாற்றை எரித்துவிடலாம் எனவும், எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்றும் பேசியுள்ளார்.
ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம் - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளார். தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் நடத்தப்பட்ட தரைவழி தாக்குதலின்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைப்பற்றப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் உடலைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட, டிஎன்ஏ பரிசோதனையில் சின்வார் உயிரிழந்தது உறுதியானதாகவும், ஆனாலும் போரை நிறுத்தப்போவதில்லை என்றும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
தென்னாப்ரிக்கா அணி அபாரம்
மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்ரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்ரிக்கா அணி, கடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு ஆஸ்திரேலியாவை பழிவாங்கியுள்ளது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
நியூசிலாந்து அணி தடுமாற்றம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பெங்களூரு டெஸ்ட் போட்டியின், மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறி வருகிறது. 10.30 மணி நிலவரப்படி, 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்களை சேர்த்து, 178 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.