IIT Student Death: ஐஐடியில் என்னதான் நடக்குது? தொடரும் மர்மம்.. சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவர்!
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
ஐஐடியில் தொடரும் மர்மம்:
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் உள்பட நாட்டின் முன்னணி உயர் கல்வி நிலைங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, மும்பையில் உள்ள ஐஐடியில் 18 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐஐடி மும்பையில் பட்டியல் சாதி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாக அவர் தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக மாணவர் குழுவினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மாணவர் தற்கொலை:
அதாவது, மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவரின் பெயர் கிரண் சந்திரா. இவர், நேற்று இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கிரண், பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் கிரண் சந்திரா மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, படிக்க வேண்டும் என்று கூறி, அவரது அறைக்கு கிரண் சந்திரா சென்றார். அங்கு இரவு 8.30 மணியளவில் கிரண் சந்திரா அறைக்கு, அவரது நண்பர்கள் சென்றனர். அங்கு அறை உள்ளே பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரமாக கதவை தட்டிப் பார்த்து திறக்காததால் கதவை உடைத்துள்ளர். அங்கு மாணவர் கிரண் சந்திரா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகே அவரது தற்கொலைக்கான முழுக் காரணம் தெரியவரும்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)