Manipur Violence: ராணுவத்திடம் தஞ்சம் புகுந்த பழங்குடிகள்.. அட்டூழியத்தில் ஈடுபட்ட பெண்கள்.. மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
வன்முறைக்கு மத்தியில் அருகில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம்களிலும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு முகாம்களிலும் 100க்கும் மேற்பட்ட பழங்குடிகள் தஞ்சம் புகுந்தனர்.
மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பெரும்பான்மை மெய்தேயி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் நாட்டையே உலுக்கியது.
இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, ராணுவ முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தேயி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மாநிலம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் மனித நேயத்தையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது. குஜராத் இனக்கலவரத்தை போன்று, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் அங்கு வன்முறை சம்பவங்கள் வெடித்து வருகிறது. குறிப்பாக, வன்முறை சம்பவங்களுக்கு பெண்கள் துணை போவது பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. கலவரம் வெடிக்க தொடங்கியதிலிருந்து, தற்போது வரை நடந்த பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களில் பெண்கள் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
வன்முறை நடைபெறும் இடங்களுக்கு பாதுகாப்பு படையினரை செல்ல விடாமல் பெண்கள் தடுத்து நிறுத்துவதாக ராணுவம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில், தெங்னோபால் மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வாழும் பல்லேல் பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். பல்லேல் பகுதியில் அமைந்துள்ள அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு படையின் தலைமையகத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் மீது அடையாளம் தெரியாத விஷமிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினரை நகர விடாமல் பெண்கள் கும்பல் மடக்கியது. இந்த சம்பவத்தில், 40க்கும் மேற்பட்ட பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. ஆயுதம் ஏந்திய குழுவை சேர்ந்த 8 பேருக்கும் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று பேருக்கும் குண்டடி பட்டுள்ளது.
இதற்கிடையே, அருகில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம்களிலும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு முகாம்களிலும் 100க்கும் மேற்பட்ட பழங்குடிகள் தஞ்சம் புகுந்தனர். மெய்தேயி சமூக தன்னார்வலர்களுக்கும் பழங்குடி ஆயுதம் ஏந்திய குழுவுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது தவறான தகவல் என மணிப்பூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.