INDIA கூட்டணியில் இருந்து வந்த அழைப்பு.. சேராததற்கு இவங்கதான் காரணம்.. மனம் திறந்த தேவகவுடா
உடைந்து போன ஜனதா கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதில் இணைய தான் விரும்பவில்லை என்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தேசிய அளவில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது ஜனதா தளம். காலபோக்கில், அந்த கட்சி உடைந்து தற்போது பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. பிகாரில் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங், கர்நாடகத்தில் தேவகவுடா போன்ற தலைவர்கள் ஒரு காலத்தில் ஜனதா கட்சியில் இருந்தவர்கள்தான்.
உடைந்து போன ஜனதா கட்சிகள்:
1990களுக்கு பிறகு, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தியதன் விளைவாக, அரசியல் சக்திகளாக உருவெடுத்தனர். பல கட்சிகளாக உடைந்த ஜனதா தளத்தை மீண்டும் ஒன்று சேர்க்க பல ஆண்டுகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு பலன் கிடைத்தபாடில்லை.
ஐக்கிய முன்னணி, தேசிய முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்கள் மத்தியில் ஆட்சி அமைக்க ஜனதா கட்சிகள் ஆதரவே காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், உடைந்து போன ஜனதா கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதில் இணைய தான் விரும்பவில்லை என்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான்கு மாதங்களுக்கு முன்பு ஜனதா சுதந்திர முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
INDIA கூட்டணியில் இருந்து வந்த அழைப்பு:
என்னை அணுகினார்கள். ஆனால், எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு தேசிய பதவிகளில் ஆர்வம் இல்லை. 91 வயதாகிறது. காங்கிரஸ் என்னை கைவிட்டதை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த வயதில் எனக்கு எந்த சோதனையும் வேண்டாம் என கூறிவிட்டேன். சுமார் மூன்று - நான்கு மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய ஜனதா தளம் - மதச்சார்பற்ற ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சியை உருவாக்க நிதிஷ் குமார் என்னை தொடர்பு கொண்டார். ஜனதா தளத்தில் இருந்த பல குழுக்களுடன் ஜனதா சுதந்திர முன்னணியை உருவாக்க அவர் விரும்பினார்.
என்னை சமாதானப்படுத்த நிதிஷ் தனது கட்சித் தலைவரையும், மூத்த தலைவர்களையும் அனுப்பினார். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. நான் அவரிடம், நீங்கள் விரும்பினால், மற்ற கட்சிகளைத் தொடர்பு கொள்ளலாம் என சொல்லிவிட்டேன்” என்றார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போது INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அல்லாத கட்சிகளை இணைத்து தேசிய அளவில் மெகா கூட்டணியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நிதிஷ் குமார் அதற்காக பல முயற்சிகளை செய்தார். இறுதியில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி உருவாக்கப்பட்டது. அதேபோல, சமீபத்தில்தான், பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்தது.