"இந்த மாதிரி ஆட்களை தூக்குல போடணும்" புனே பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கொதித்த ஏக்நாத் ஷிண்டே!
Pune Case: பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தூக்கில் போட வேண்டும் என புனே பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

Pune Molestation: புனேவில் இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இம்மாதிரியான குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை தூக்கில் போட வேண்டும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்கள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கொல்கத்தா, டெல்லி என முக்கிய நகரங்களில் நடக்கும் குற்றச் செயல்கள், பெண்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
இப்படிப்பட்ட சூழலில், புனேவில் நேற்று முன்தினம் காலை பேருந்தில் வைத்து 26 வயது பெண் ஒருவரை தத்தாத்ரேய ராம்தாஸ் என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம், நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியும், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந் சம்வபத்தில் ஈடுபட்ட யாரையும் தப்பக்கி விட மாட்டோம் என்றும் இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கொந்தளித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய ஏக்நாத் ஷிண்டே, "புனே சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் தப்பிக்கவிட மாட்டோம். இம்மாதிரியான ஆட்களை தூக்கிலிட வேண்டும்" என்றார்.
"கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என மகாராஷ்டிராவின் மற்றொரு துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசை கடுமையாக சாடிய மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல், "டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தபோது, மக்கள் ஆட்சியை மாற்றினர். நீங்கள் (பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு) பெண்களுக்கான 'லாட்கி பஹின்' திட்டத்தை ஊக்குவிக்கிறீர்கள். ஆனால், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை புறக்கணிக்கிறீர்கள்" என்றார்.
சிசிடிவி மூலம் குற்றம்சாட்டப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரைக் கண்டுபிடிக்க போலீசார் எட்டு சிறப்பு படைகளை அமைத்துள்ளது. தொடர் தேடுதல் பணி நடந்து வருகிறது.

