2DG Corona medicine: 2டிஜி கொரோனா மருந்து இன்று முதல் விநியோகம்; புதிய நம்பிக்கை விதைத்திருக்கும் அந்த மருந்தின் சிறப்பு என்ன?
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் இணைந்து தயாரித்த 2டிஜி மருந்து இன்று முதல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மிகவும் போராடி வருகின்றன. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அதிக முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. அத்துடன் மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியையும் அரசு அதிகரித்து வருகிறது. அதேபோல் கொரோனா நோய் தடுப்பிற்கு தேவையான மருந்துகளை உருவாக்குவதில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்த அமைப்பு 2டிஜி என்ற மருந்தை அண்மையில் தயாரித்து சோதனை செய்தது. அதில் நல்ல முடிவுகள் வந்தவுடன் இதனை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இன்று முதல் இந்த 2டிஜி கொரோனா மருந்து சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்தச் சூழலில் அந்த மருந்து என்ன? எப்படி செயல்படும்? எப்படி எடுக்க வேண்டும்?
2டிஜி:
2-டியாக்சி- டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG)) எனப்படும் இந்த மருந்தை தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO) மற்றும் ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த மருந்து பவுடர் வகையில் இருக்கும்.
An anti-COVID-19 therapeutic application of the drug 2-deoxy-D-glucose (2-DG) has been developed by INMAS, a lab of DRDO, in collaboration with Dr Reddy’s Laboratories, Hyderabad. The drug will help in faster recovery of Covid-19 patients. https://t.co/HBKdAnZCCP pic.twitter.com/8D6TDdcoI7
— DRDO (@DRDO_India) May 8, 2021
2டிஜி செயல்பாடு:
பொதுவாக ஒரு வைரஸ் நமது உடம்பிற்குள் சென்றால் அது நம் உடலில் வளர சக்தி தேவைப்படுகிறது. இதற்காக அந்த வைரஸ் நமது உடம்பிலிருந்து குளுக்கோஸை எடுக்கிறது. அதன் பின்னர் நமது உடம்பில் அந்த வைரஸ் வளர்கிறது. இந்த முறையை பயன்படுத்தி வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 2டிஜி மருந்து அமைந்துள்ளது. அதாவது 2டிஜி மருந்தை அருந்திய உடன் இந்த குளுக்கோஸை வைரஸ் எடுத்து கொள்ளும். அதன்மூலம் வைரஸ் நம் உடம்பில் வளர்வதை தடுக்க இம்மருந்து வழிவகை செய்யும்.
இந்த மருந்தை கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பல கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படும் நாட்கள் குறைக்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவையையும் இல்லாமல் இருந்தது. மேலும் இது வைரஸின் குளுக்கோஸ் ஆக செயல்படு முறையில் தயாரிக்கப்பட்டதால் இது அனைத்து வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து செயல்படும் வகையில் அமைந்துள்ளது.
2டிஜி எப்படி எடுத்து கொள்ள வேண்டும்?:
2டிஜி பவுடர் முறையில் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வழக்கம் போல் குளுக்கோஸ் எடுத்து கொள்வதை போல் தண்ணீரில் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்கள் ஒரு நாளைக்கு இரு முறை இந்த மருந்தை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு 5 முதல் 7 நாட்கள் வரை கொரோனா நோயாளிகள் இம்மருந்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இன்று முதல் 10ஆயிரம் 2டிஜி மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.