காசு மேல காசு வந்து.. ரூபாய் நோட்டை இதை வைத்துத்தான் தயாரிக்கிறார்கள்.. தெரியவந்த சர்ப்ரைஸ் தகவல்..
இந்திய ரூபாய் நோட்டுகள் எதை வைத்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா?
நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக் கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று ரூபாய் நோட்டு. தினமும் ஒரு டீ வாங்க, பால் வாங்க மற்றும் காய்கறி வாங்க அன்றாடம் இந்த ரூபாய் நோட்டை நாம் எப்போதும் பயன்படுத்துவது வழக்கம். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்போதும் நம்முடைய பாக்கெட் முழுவதும் ரூபாய் நோட்டை வைத்திருக்கிறோம். ஆனால் என்றாவது இந்த ரூபாய் நோட்டுகள் எதை வைத்து எப்படி செய்யப்படுகிறது என்று தெரிந்து கொண்டுள்ளோமா? என்றால் அதற்கு பதில் எப்போதும் இல்லை என்பது தான்.
இனியாவது நம்முடைய ரூபாய் நோட்டுகள் எப்படி செய்யப்படுகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி அதற்கு முன்பாக இந்தியாவில் ரூபாய் நோட்டை யார் அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள் என்று தெரியுமா? அதையும் இந்த கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது யார்? புழக்கத்தில் விடுவது யார்?
ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 22-ன்படி இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்து புழக்கத்தில் விடும். இதன்படி ரிசர்வ் வங்கி தன்னுடைய மூன்று அச்சகங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடும். ஆனால் ஒரு ரூபாய் நோட்டை மட்டும் மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அச்சடித்து வழங்கப்படும். ஆகவே தான் அந்த ரூபாய் நோட்டில் மட்டும் நிதித் துறை செயலாளாரின் கையொப்பம் இருக்கும். மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்திலும் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இருக்கும்.
இந்திய ரூபாய் நோட்டுகள் எதில் தயாரிக்கப்படுகின்றன?
இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் தான் அச்சடிக்கப்பட்டு வருகிறது என்று நாம் நம்பி இருந்தால் அது உண்மை அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியின் தகவலின்படி இந்திய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 100 சதவிகிதம் பருத்தியில் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பருத்தி மற்றும் நார் பொருளான லினென்(Linen) ஆகிய இரண்டு கலந்த காகிதத்தில் தான் இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.
ஏன் பருத்தி வைத்து தயாரிக்கப்படுகிறது?
இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதங்களுக்கு பதிலாக பருத்தியை தேர்வு செய்தற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதாவது பருத்தியில் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் எளிதாக கிழியாது. மேலும் பருத்தி காகிதத்துடன் ஜெலட்டின் போன்ற பசையை தடவும் போது அது நீண்ட நாட்கள் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டுள்ளது. ஆகவே தான் ரூபாய் நோட்டு தயாரிக்க பருத்தி பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா ரூபாய் நோட்டு மட்டும்தான் பருத்தியில் தயாரிக்கப்படுகிறதா?
பருத்தியை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்படவில்லை. அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் கரன்சி நோட்டுகள் பருத்தியை வைத்தே செய்யப்படுகின்றன. அமெரிக்க டாலர் 75 சதவிகிதம் பருத்தியும் 25 சதவிகிதம் லினன் னும் வைத்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் அச்சடிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: சகிப்புத்தன்மை இல்லையா? இதெல்லாம் ஒரு பிரச்சனையா? வாயை விட்ட சொமாட்டோ நிறுவனர்..வெடிக்கும் பூகம்பம்