தற்பாலின ஈர்ப்பு விளம்பரத்தை நீக்கிய டாபர்: அமைச்சர் எச்சரிக்கைக்கு பணிந்தது!
அமைச்சரின் எச்சரிக்கைக்கு இணங்க டாபர் நிறுவனம் ஓரின சேர்க்கையாளர்கள் கர்வா சவுத் பண்டிகை கொண்டாடுவதை போல சித்தரித்திருந்த விளம்பரத்தை நீக்கி டாபர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளளது.
ம.பி.,யில் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. அவருடைய ஆட்சியில் அமைச்சராக இருக்கும் நரோத்தம் மிஸ்ரா டாபர் நிறுவனம் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் நான்காவது நாளை, 'கர்வா சவுத்' பண்டிகை என்ற பெயரில் வட மாநில பெண்கள் கொண்டாடுகின்றனர். கணவனின் நலன் மற்றும் திருமண பந்தம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கணவனை அமர வைத்து மரியாதை செலுத்தி வணங்குவது வழக்கம். இந்த பண்டியை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 'டாபர்' நிறுவனத்தின், 'பெம் கிரீம்' என்ற முகப் பொலிவு கிரீமின் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இரண்டு பெண்கள் தம்பதியராக இந்த பண்டிகையை கொண்டாடுவது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது. இது ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ம.பி.,யின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஹிந்துக்களின் பண்டிகைகளை குறித்து மட்டுமே இதுபோன்ற விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஓரின சேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள் கர்வா சவுத் கொண்டாடுவதை போல படம் எடுத்தவர்கள், ஹிந்து முறைப்படி இரண்டு இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை போல நாளை படம் எடுப்பர். இது கண்டிக்கதக்கது.அந்த விளம்பரத்தை திரும்ப பெற வலியுறுத்தும்படி, மாநில டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன். விளம்பரத்தை திரும்ப பெற தவறினால், 'டாபர்' நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை பாயும்." என்று அவர் கூறியிருந்தார். முன்னதாக இந்த பிரச்சனை எழுவதற்கு காரணமாக டெல்லி மற்றும் கேரளா உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் ஓரின சேர்க்கை திருமணத்தை பற்றி வந்திருதன. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே திருமணம் நடக்க வேண்டும் என்ற மனுவிற்கான விசாரணை நவம்பர் 30 ஆம் தேதி தள்ளிவைக்க பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அந்நிறுவனம் அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது. விளம்பரத்தை நீக்கியது மட்டுமின்றி பகிரங்க மன்னிப்பையும் கேட்டுள்ளது. "டாபர் மற்றும் ஃபெம் நிறுவனம் இந்தியாவின் பன்முகத்தன்மை, சமத்துவம், பண்பாடு ஆகியவற்றிற்காக போராடுகிறது. எங்களது ஃபெம் விளம்பரம் சம்மந்தப்பட்ட எல்லா விளம்பர தளங்களில் இருந்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது, இது எவருடைய உணர்வையும் குறிவைத்து புண்படுத்தும் நோக்கம் அல்ல, அப்படி புண்படுத்தியிருந்தால் டாபர் நிறுவனம் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறது, "என்று டாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரத்தை நீக்கியது குறித்து அமைச்சர் மிஷ்ரா கூறுகையில், "வழக்கு பதியும் முன் விளம்பரத்தை நீக்க கூறி எச்சரிக்கை விடுத்திருந்தேன், அது போல நீக்கி, மன்னிப்பும் கோரியிருப்பது நல்லது" என்று கூறினார்.