தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுமா? விசாரணைக்கு எடுக்க உள்ள அரசியல் சாசன அமர்வு..!
இந்த வழக்கை விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வை உருவாக்கி உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது.
தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு:
கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இச்சூழலில், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், "தன்பாலீர்ப்பாளர்கள் லிவிங் டு கெதரில் இருந்து பாலியல் உறவு கொள்வதை இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது.
கணவன், மனைவி, குழந்தை அடங்கிய இந்திய குடும்ப அமைப்பை பொறுத்தவரையில், கணவன் என்ற ஆண், மனைவி என்ற பெண், இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும்.
திருமணம் என்ற கருத்தாக்கம், தவிர்க்க முடியாத எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கிடையே ஒரு உறவை முன்வைக்கிறது. இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சட்டரீதியாகவும் திருமணத்தின் யோசனை மற்றும் கருத்தாக்கத்தில் வேரூன்றியுள்ளது. நீதித்துறை விளக்கத்தால் தொந்தரவு செய்யப்படவோ அல்லது நீர்த்துப்போகவோ கூடாது.
திருமண உறவுக்குள் நுழையும் நபர்கள் சொந்த பொது முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர். ஏனெனில், இது ஒரு சமூக நிறுவனமாகும். அது, பல உரிமைகள், பொறுப்புகளை கொண்டுள்ளன" என குறிப்பிட்டிருந்தது.
அரசியல் சாசன அமர்வில் முக்கிய மாற்றம்:
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வை உருவாக்கி உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமர்வில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சய் கிஷன் கவுல், வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளார். வழக்கமாக, அரசியல் சாசன அமர்வில் இணை நீதிபதியாக இரண்டாவது மூத்த நீதிபதி நியமிக்கப்பட மாட்டார்.
இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேரலையாக ஸ்ட்ரீம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.