Congress Leader: காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே
Congress Leader: காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றுக் கொண்டார்.
Congress Leader: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
137 ஆண்டுகள் பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக தலைவர் பதவியை வகித்து வந்தனர். அந்த வரிசையில் ராகுல்காந்தி தலைவர் பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து, முழுநேர தலைவரை தேர்வு செய்தால் கட்சி பலப்படும் என கருத்து பரவலாக கட்சி நிர்வாகிகளிடையே பேசப்பட்டு வந்தது. அதனால் முழு நேர தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. சோனியா காந்தி குடும்ப ஆதரவு பெற்ற வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவும் மூத்த தலைவர் சசி தரூரும் போட்டியிட்டனர். இதனை அடுத்து, நாடு முழுவதும் 68 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 9,915 மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஓட்டு போட்டனர். இந்த வாக்குகள் கடந்த 19-ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு பெற்று மல்லிகார்ஜுன கார்கே வரலாறு படைத்தார்.
பொறுப்பேற்றார் கார்கே
டெல்லி மாநிலத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, தேர்தல் சான்றிதழை கார்கேவிடம் முறைப்படி வழங்கினார். பின்னர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பொறுப்புகளை கார்கேவிடம் ஒப்படைத்தனர்.
LIVE: Presentation of Certificate of election at AICC HQ. https://t.co/iNg3U2tFXw
— Mallikarjun Kharge (@kharge) October 26, 2022
கடந்து வந்த பாதை
கார்கே 1969 இல் தனது சொந்த ஊரான குல்பர்கா நகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து மாநில அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து வந்துள்ளார். 1972 இல் அவர் முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் அரசியலில் நுழைந்தார். அப்போது முதல் வெற்றியை பதிவு செய்த அவர் அதற்கு பின்னரும் தொடர்ந்து எட்டு முறை வெற்றி பெற்று சாதனை படைத்தார். 1976ஆம் ஆண்டு தேவராஜ் அரசில் முதல் முறையாக அமைச்சரானார்.
1970களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியுடனான மோதலுக்குப் பிறகு தேவராஜ் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸை (யு) என்ற கட்சியை தொடங்கினார். தேவராஜ் மீதான பற்றால் அவரின் கட்சியில் கார்கே இணைந்தாலும், 1980 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் காங்கிரஸுக்குத் திரும்பினார்.
1980இல் குண்டுராவ் அமைச்சரவையிலும், 1990ல் எஸ் பங்காரப்பா அமைச்சரவையிலும் 1992 முதல் 1994 வரை எம் வீரப்ப மொய்லி ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார். 1996-99ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் மற்றும் 2008-09, மற்றும் 2005-08 முதல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய அரசியலுக்கு செல்வதற்கு முன்பு 2009 இல், அவர் முதல் முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர்த்துறை அமைச்சராகவும், பின்னர் ரயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் மேம்பாட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
2014இல் காங்கிரஸ் மோசமான தோல்வியைச் சந்தித்த பிறகு மக்களவையில் அவர்களின் பலம் 44ஆக குறைந்தது. அப்போதுதான், கார்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குல்பர்கா தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நாங்கள் மக்களவையில் 44 பேராக இருக்கலாம், ஆனால் நூறு கௌரவர்களால் பாண்டவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள்" என்றார். 2019ஆம் ஆண்டில், தேர்தல் வாழ்க்கையில் முதன்முறையாக, கார்கே தோல்வியை சந்தித்தார். இதையடுத்து, கட்சி அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது. மேலும், பிப்ரவரி 2021 இல் அவரை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் சட்டசபை தேர்தல்
பல மாநிலங்கிளில் காங்கிரஸ் கட்சியை வெளியேற்றி, பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், மல்லிகார்ஜுன கார்கே தலைவர் பொறுப்பை ஏற்றார். அடுத்த மாதம் நவம்பர் 12 ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அது போன்று விரைவில் குஜராத் சட்டசபை தேர்தலும் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை முறியடித்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வாரா என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது.