காலநிலை மாற்றத்தின் விளைவு; இந்தியாவின் உணவுப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் : IPCC அறிக்கை சொல்வது என்ன?
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.இந்நிலை தொடர்ந்தால் உலகம் மீளவே முடியாத பேராபத்தை நோக்கி தள்ளப்படும்-அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தினை எதிர்கொள்ள தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் போதாது. இந்நிலை தொடர்ந்தால், உலகம் மீளவே முடியாத பேராபத்தை சந்திக்கும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு ( ஐ.பி.சி.சி.) காலநிலை மாற்றம் குறித்து இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கை சொல்வது என்ன?
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மனிதர்களுக்கும் சூழல் அமைப்பிற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி வரையிலான மக்கள் காலநிலை மாற்றத்தின் தீவிர பாதிப்பிற்கு ஆளாகும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- இன்னும் சில ஆண்டுகளில் புவி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயரும். அதனால் தீவிர காலநிலை பேரிடர்களும், மனிதர்கள் மற்றும் சூழல் அமைப்புகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்.
- புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குள் கட்டுப்படுத்த முழுமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஏற்படப் போகும் பாதிப்புகளை முற்றிலுமாக தடுக்க முடியாது.
- காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் தாக்கங்களும் நாளுக்கு நாள் சிக்கலானதாகவும் கையாள்வதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறலாம்.
- ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தீவிர காலநிலை பேரிடர்கள் நிகழும் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்தகைய சமயங்களில் காலநிலை மாற்றத்தை தடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வேறு சில புதிய பிரச்சனைகளை உருவாக்கும்.
- அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த, சமத்துவமிக்க நடவடிக்கைகள் மட்டுமே நீடித்த மற்றும் நிலையான தகவமைப்பிற்கு உதவும்.
இந்த அறிக்கையை வெளியீட்டின் போது பேசிய ஐ.பி.சி.சி. குழுவின் தலைவர் ஹோசங் லீ “இந்த அறிக்கையானது காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்காவிட்டால் ஏற்படும் பயங்கர விளைவுகள் என்ன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இப்பிரச்சனையைத் தடுக்க நாம் இன்று மேற்கொள்ளும் தீர்க்கமான முடிவுகளே எதிர்காலத்தில் மக்கள் எப்படி தங்களை தகவமைத்துக்கொள்ளப் போகிறார்களை என்பதை நிர்ணயம் செய்யும்” எனக் கூறினார்.
உயர்ந்து வரும் புவி வெப்பநிலையால் ஆசிய கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகள் கடும் வெப்ப அலைகளையும் வறட்சியையும் சந்திக்கும் என இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய நகரங்கள் சந்திக்க இருக்கும் வெப்ப அலைகள், கடல் நீர்மட்ட உயர்வு, உணவுப் பற்றாக்குறை, பொருளாதார பாதிப்பு, சுகாதார சீர்கேடுகள் பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது.
வெப்ப அலைகள்:
இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கும் நிலையில் வெட்-பல்ப் வெப்பநிலையும் வேகமாக அதிகரிக்கும். RCP 8.5 என்கிற அதிகபட்ச பசுமை இல்ல வாயு வெளியேற்ற அளவு தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் லக்னோ, பாட்னா நகரங்களின் வெட்-பல்ப் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும் சென்னை, மும்பை, புவனேஷ்வர்,இந்தூர்,அஹமதாபாத் ஆகிய நகரங்களின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசையும் எட்டும். இதனால் ஒரு நடுத்தர வயது இளைஞன் நிழலில் இருந்தால் கூட 6 மணி நேரத்திற்கு மேல் அவரால் உயிர் பிழைத்திருக்க முடியாது என்று எச்சரிக்கிறது இந்த அறிக்கை.
கடல் நீர்மட்ட உயர்வு:
இந்தியாவில் கடற்கரையின் நீளம் அதிகம்;கடலோரம் வாழும் மக்களுக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். தொடர்ந்து அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் இருந்தால் 2050க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் குடியிருப்பு பகுதிகளை கடல் நீர் சூழும் அபாயத்தில் 3.5 கோடி மக்களும், நூற்றாண்டின் இறுதியில் 5 கோடி மக்களும் வாழ நேரிடும். இதனால் இந்தியாவிற்கு ஏற்படும் பொருளாதார இழப்பானது உலகின் பிற எந்த நாடுகளையும் விட அதிகமாக இருக்கும் என அறிக்கை எச்சரிக்கிறது.
உணவுப் பற்றாக்குறை:
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர காலநிலை நிகழ்வுகளான வறட்சி, பெரு வெள்ளம், கனமழை போன்றவை மிகப்பெரிய அளவில் வேளாண் தொழிலை பாதிக்கும். இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 2050ம் ஆண்டில் இந்தியாவில் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 விழுக்காட்டை எட்டும்; வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை தாண்டும் பட்சத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திராவில் வெள்ளம் அதிகரிக்கும். இந்தியாவில் அரிசி, கோதுமை, பருப்பு, தானியம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி 2050ம் ஆண்டில் 9 விழுக்காடு குறையும். தென்னிந்தியாவில் சோளம் உற்பத்தி 2050ம் ஆண்டில் 17 விழுக்காடு வரை குறையும்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய Council on Energy, Environment and Water என்ற அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி அருணபா கோஷ் “ இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.பி.சி.சி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை, நீர் வழி பரவும் நோய்கள் மற்றும் வறட்சி, வெப்பத்தால் ஏற்படும் உயிர்ப்பன்மைய இழப்பு ஆகிய மூன்று பிரச்சனைகளும் மிகவும் கவலை அளிக்கிறது. இதை எதிர்கொள்ள இந்திய அரசு குறிப்பிடத்தக்க தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”என்றார்.
”மனித இனம் பல நூற்றாண்டுகளாக இயற்கையை அதன் எதிரிபோல நடத்தியுள்ளது. இயற்கையால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற இயலும் என்பதே உண்மை. ஆனால்,முதலில் நாம் அதை பாதுகாக்க வேண்டும்:” என ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்திற்கான செயல் இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.