BS Yediyurappa Resigns : கண்ணீருடன் ராஜினாமா அறிவிப்பு.. கர்நாடக ஆளுநருடன் முதல்வர் எடியூரப்பா சந்திப்பு
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினமா செய்வதற்காக அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை எடியூரப்பா ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தி்த்து வருகிறார்.
கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வருபவர் எடியூரப்பா. இவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த சில தினங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தது. அவர் ராஜினாமா செய்ய உள்ள தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா கடிதத்தை அளிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அந்த மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை சந்திப்பதற்காக சற்றுமுன் முதல்வர் எடியூரப்பா நேரில் சென்றுள்ளார். இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளிப்பார் என்று எதிர்பார்க்ப்படுகிறது.
கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்கு முன்பாக, உணர்ச்சிகரமாக கண்ணீர்மல்க பேசியுள்ளார். நான் ஆட்சிக்கு வந்தது முதல் நெருக்கடி இருந்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக தொற்று காலம். நாங்கள் அதற்காக கடினமாக உழைத்தோம். எனக்கு வருத்தம் ஏதுமில்லை. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
Deeply influenced by Jagajyoti Basavanna's philosophy of Kayaka, Dasoha Tattva & the life of Lingaikya Shri Shivakumara Swamiji of Siddaganga Mutt, I have dedicated my entire 50 years of public life towards nation building and fulfilling the aspirations of the people of Karnataka
— B.S. Yediyurappa (@BSYBJP) July 26, 2021
தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரியில் பா.ஜ.க. பெரிய வளர்ச்சி அடையாத சூழலில் கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தியவர் எடியூரப்பா. கடந்த 2008-ஆம் ஆண்டில் முதன்முறையாக கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, 2011ம் ஆண்டில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அப்பொறுப்பில் இருந்து பதவி விலகினார்.
தற்போது அவரது தலைமையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், எடியூரப்பாவின் மகன்கள் ஆட்சி நிர்வாகத்தில் பெரிதும் தலையிடுவதாக டெல்லி பா.ஜ.க. தலைமைக்கு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சென்றது. மேலும் எடியூரப்பாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் தொடர்ந்து கர்நாடக பா.ஜ.க.வினரால் எழுப்பப்பட்டு வந்தது.
இந்த சூழலில், கடந்த வாரம் எடியூரப்பா திடீரென டெல்லி சென்றார். அப்போது, பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை நேரில் சந்தித்தார். பா.ஜ.க.வின் கொள்கைப்படி, 75 வயதானவர்கள் முக்கிய பொறுப்புகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எடியூரப்பா ஆட்சி மீதான குற்றச்சாட்டுகள், அவரது வயது மூப்பு ஆகியவற்றின் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியானது.
மேலும், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் என் மரியாதையையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர். இந்த அன்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாஜகவில் 75 வயது நிறைவடைந்த ஒருவருக்கு, பதவிகள் தரப்படுவதில்லை. ஆனால், என்னை 78-79 வயது வரை அவர்கள் பணி செய்ய அனுமதித்துள்ளார்கள். பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் ஏற்ற வேண்டும். மாநிலத்தில் கட்சியை பலப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. ஜே.பி.நட்டா என்ன சொன்னாலும் அதைப் பின்பற்றுவேன். பா.ஜ.க.வின் மீது உயரிய விசுவாசம் கொண்டவன் என்பதில் பெருமை கொள்கிறேன். உயர்ந்த நடத்தை முறைகளை பின்பற்றி கட்சிக்கு சேவை செய்திருக்கிறேன். கட்சி நெறிமுறைகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். கட்சிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் மற்றும் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்காள்வதாக கூறியிருந்தார்.
அவரது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அவர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்பதை உறுதி செய்தது. இந்த நிலையில், கர்நாடக மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை அளிப்பதற்காக சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.