தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்! கர்நாடகாவில் ஓலா, ஊபர் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் !
வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கர்நாடகாவில் உள்ள ஆட்டோ சங்கங்கள் “நம்ம யாத்ரி” எனும் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிக கட்டணம் வசூலிப்பதாக ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற போக்குவரத்து செயலிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்டோக்களுக்கு கர்நாடக அரசு தடை விதித்த நிலையில் அந்த நிறுவனத்தின் பணியாற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று (திங்களன்று) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (ஆர்டிஓ) வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
”சட்டவிரோத ஆட்டோ ரிக்ஷா சேவைகளை" உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கர்நாடக போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற செயலிகள் அடிப்படையில் செயல்படுவது சட்டத்திற்கு எதிரானது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த செயலிகள் மூலம் இயங்கும் ஆட்டோக்களின் சேவைகள் மட்டும் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனை கண்டித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெளியே தங்களது ஆட்டோக்களை நிறுத்தி , ஓட்டுநர்கள் அறிவிப்பை திரும்ப பெறும்படி முழக்கங்களை எழுப்பினர்.
டெல்லி, மும்பை, சென்னை பெங்களூரு, ஹத்ரபாத் போன்ற மிகவும் பரபரப்பான பெரு நகரங்களில் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கான போக்குவரத்துகளில், பொது போக்குவரத்துகளுக்குப் பிறகு இன்று தவிர்க்க முடியாத இடத்தினை பிடித்திருப்பது, செயலிகள் மூலம் இயங்கும் ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பைக்குகள் தான். அதிலும் தொழில்நுட்பம் வளர வளர செயலிகளை கொண்டு செயல்படும் வாகனங்களின் எண்ணிக்கையும், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், தொடக்கத்தில் மிகவும் தகுந்த கட்டணங்களுக்கு சேவையை வழங்கி வந்த ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள், தங்களுக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கட்டணங்களின் அளவினையும் கணிசமாக ஏற்றி வருகிறது. அதிலும், சாதாரண நாட்களில் ஒரு கட்டணமும், விழாக்காலங்களில் ஒரு கட்டணமும், இரவு நேரங்களில் ஒரு கட்டணமும், மழை காலங்களில் ஒரு கட்டணமும் என நிறுவனங்கள் இஷ்டத்திற்கு தங்களின் சேவைக் கட்டணங்களை நிர்ணயித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிற்கும் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கர்நாடகாவில் 292 புகார்கள் பதிவு செய்யப்பட்டுளது. இதனை கவனத்தில் கொண்ட, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு, புதிய அரசாணையினை பிறப்பித்துள்ளது. அதில், அடுத்த மூன்று நாட்களுக்குள் ஓலா, உபர், ரேபிடோ போன்ற செயலிகள் மூலம் செயல்படும் ஆட்டோக்களுக்கு மட்டும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அரசாணையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் செயலிகள் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்வதோடு மட்டும் இல்லாமல், ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த தொகையினை விடவும் அதிக கட்டணங்கள் செலுத்தி பயணிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு 30 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும் என அரசு ஏற்கனவே கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அதேபோல், வரும் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கர்நாடகாவில் உள்ள ஆட்டோ சங்கங்கள் “நம்ம யாத்ரி” எனும் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.