Crime: சேர் கவர் கலர் சரியில்ல.. கல்யாண வீட்டில் தகராறு.. கொலையில் முடிந்த விபரீதம்!
பிரச்னை இல்லையென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு என்ன மரியாதை என வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டை போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அது சில நேரங்களில் எதிர்பாராத விஷயங்களில் சென்று முடியும் அளவுக்கு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் நடைபெற்ற தகராறில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வீட்டில் தகராறு
பொதுவாக திருமணம் என்பது பெற்றோர்கள் மட்டுமல்லாது மணமக்களின் மிகப்பெரிய கனவாக இருக்கும். இத்தகைய கல்யாண பேச்சு தொடங்குவது தொடங்கி தாலி கட்டும் நேரம் வரை எந்தவித பிரச்னையும் வந்துவிடக் கூடாது என கடவுளை வேண்டிக் கொள்வோம். அதையும் மீறி பிரச்னை இல்லையென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு என்ன மரியாதை என வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டை போடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார். அது சில நேரங்களில் எதிர்பாராத விஷயங்களில் சென்று முடியும் அளவுக்கு உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
சேர் கவர் கலர் சரியில்ல
இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் வெளியான தகவலின்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பார்சியா கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மருமகன் அஜித் குமார் சிங் என்ற போதா, நிகழ்ச்சிகளுக்கு பந்தல் போடும் பணியை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மஜோவா கிராமத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டு விட்டதாக கூறிய அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி தனது மருமகனை கண்டுபிடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஹால்டி காவல் நிலையத்தில் அஜித் குமார் சிங் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே நவம்பர் 25 ஆம் தேதி, ஹுகும் சாப்ரா காட் அருகே கங்கை நதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதில் ஒரு நபரின் உடல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அவ்வழியாக சென்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்த நிலையில் இருப்பவர் காணாமல் போன அஜித் குமார் சிங் என்பது அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து சகோதரர் சந்தன் குமார் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த கொலையை செய்ததாக பியூஷ் குமார் சிங், அனிஷ் குமார் சிங் மற்றும் அங்கூர் சிங் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிப்பட்டது.
அதாவது, நவம்பர் 22 ஆம் தேதி மஜோவா கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக அஜித் பந்தல் போடுவதற்காக சென்றுள்ளார். அன்று அதிகாலை 1 மணியளவில், நாற்காலி மற்றும் சோபா கவர்களின் நிறத்தை மாற்றுவது தொடர்பாக அங்கிருந்த சிலருக்கும், அஜித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பியூஷ் குமார் சிங், அனிஷ் குமார் சிங் மற்றும் அங்கூர் சிங் ஆகிய 3 பேரும் அஜித்தை கொன்று உடலை மோட்டார் சைக்கிளில் கட்டி கங்கை நதியில் வீசியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.





















