அதிகரிக்கும் கொரோனா - மகாராஷ்டிராவில் இன்று இரவு 8 மணி முதல் 144 தடை
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலாகிறது.
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனைப் கட்டுப்படுத்தவதற்காக அம்மாநில அரசு சில தினங்களுக்கு முன்பு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இன்று இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அங்கு 15 நாட்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
மிகவும் அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், ரயில், பேருந்து போன்ற பொதுசேவையை அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கவும், மக்கள் வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிலையம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு முடக்கத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழு முடக்கம் அமலாவதால் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கவும் மகாராஷ்டிர மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.