தஞ்சையில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா - கல்லூரி நிர்வாகத்திற்கு அபராதம்..
தஞ்சையில், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகி வருகின்றது. நேற்று ஒரே நாளில் தஞ்சையில் 66 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில், கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் ஏற்கனவே 13 பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் நேற்று மேலும் இரண்டு பள்ளிகளில் 14 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட ஆட்சியர் திரு. கோவிந்த் ராவ் தெரிவித்தார்.
அதேசமயம் அரசு விதித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத பள்ளி கல்லூரிகளுக்கு தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.