மூன்று விவசாய மசோதாக்கள் - 120 நாட்களாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..
டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் பெரும் திரளாக கூடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம். "Three Farm Act" என்று அழைக்கப்படும் மேற்குறிப்பிட்ட இந்த மூன்று விவசாய மசோதாக்களை கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதால் விவசாயிகள் பெருமளவிலான லாபத்தை பெறமுடியும் என்பது மத்திய அரசின் கருத்து.
ஆனால் இந்த மூன்று மசோதாக்களால் ஏற்கனவே பரிதாபகரமாக உள்ள தங்களுடைய நிலை மேலும் வீழ்ச்சி அடையுமே அன்றி உயராது என்பது இந்திய விவசாயிகளின் பொதுவான கருத்தாக உள்ளது. இந்த மூன்று மசோதாக்களை எதிர்த்தும் அதை திரும்பபெறக்கூறியும் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் பெரும் திரளாக கூடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த போராட்டம் இன்றோடு 120-வது நாளை எட்டியுள்ள நிலையில் இதுவரை இந்த போராட்டத்தில் 310 விவசாயிகள் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைக்கு இன்னும் செவிமடுக்காத நிலையில், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை தங்களுடைய போராட்டத்தில் இருந்து சற்றும் பின்வாங்கப்போவதில்லை என்று போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.