Thirumavalavan : "பெரியார் மண்ணில் வாலை ஆட்டினால் வால் நறுக்கப்படும்" மேடையிலே எச்சரித்த திருமாவளவன்..!
எம்.ஜி.ஆர் மீதும், மோடியா? லேடியா? என சாவல் விட்ட ஜெயலலிதா மீதும் மதிப்பு வைத்தால் பா.ஜ.க.வை அ.தி.மு.க. கைவிட வேண்டும் என திருமாவளவன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். வி.சி.க.வினர் சார்பில் திருமாவளவனுக்கு அன்பளிப்பாக தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, ”போராடி போராடி அனைத்து தடைகளையும் உடைத்து நாடாளுமன்றத்தில் அரியாசானம் போட்டு அமர்ந்துள்ளார். வி.சி.க கட்சியின் தொண்டர்கள் திருமாவின் கொள்கைகளை கடைசி வரை பின்பற்ற வேண்டும். 75 ஆண்டு காலம் சுதந்திரம் தினம் கொண்டாடிகிறோம். ஆனால் முழுமையாக 130 கோடி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடாவும் சுதந்திரம் இல்லை. உணவு, இருப்பிடம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினர் இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை.
மனுஸ்மிருதியை எதிர்ப்பதாக அம்பேத்கர் அடித்து சொன்னார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலக அரங்கிலும் உடைத்து சொன்னவர் அம்பேத்கர். இந்தியாவில் இருக்கக்கூடிய இந்து மதம் பல மாடி கட்டிடம். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னோரு மாடிக்கு போக முடியாது. இதுபோன்ற வேறுபாடு எந்த மதத்திலும் கிடையாது.
இந்தியாவில் இருக்கும் மத பேதங்கள் எந்த நாட்டிலும் இல்லை. இதை உடைத்து எரிய வேண்டிதான் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் போராடினார். சனாதனத்தை ஆதரிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும்.
மனுஸ்மிருதி பற்றிய விவாதம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும்.
சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்களை பார்த்து பரிதாபப்படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண் இது. ஆதிக்க உணர்வுகளையும், சக்திகளையும் அழிக்க போராட வேண்டும். காந்தியை மதிக்கிறேன். ஆனால் அவரது சனாதன கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்றத்தாழ்வு கடுமையாக எதிர்க்கிறேன். சாதி ஒழிய வேண்டும். அதற்கு தடையாகவும், சுவராகவும் சாதி உள்ளது. சாதி ஒழிந்தால் தான் சானாதனம் ஒழிக்க முடியும். சனாதனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமாவின் தலைமையில் செல்ல தயார்” என பேசினார்.
இதையடுத்து பேசிய தொல்.திருமாவளவன், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தனிமைபடுத்துவோம். இந்துக்களின் நம்பிக்கையை யாரும் கொச்சைபடுத்தவில்லை. இந்துக்களுக்கு எதிராக திசை திருப்பி வைப்பது மட்டுமின்றி எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை பயன்படுத்துகிறார்கள். இந்து மதத்தை காக்க நினைக்கும் மடாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை அழைத்து செவில் மீது அறைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ், பிஜேபியும் மத வழி தேசியத்தை வடிவமைக்க முயற்சிக்கின்றனர்.
காந்தியை சிறுமைப்படுத்தி பார்க்க பட்டேலுக்கு சிலை வைக்கிறார்கள். காந்தியை வணங்குகிறார்கள். கோட்சாவிற்கும் வீர வணக்கம் போடுகிறார்கள். என்னவொரு நடிப்பு. கருத்தியல் ரீதியாக ஒரே எதிரியாக இருப்பவர் அம்பேத்கர் தான். அவர்கள் நினைப்பதை செயல்படுத்த முடியாமல் தடையாக இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அதை வடிவமைத்தவர் அம்பேத்கர்.
இந்தியாவில் இரண்டு இனம் தான். ஒன்று ஆரியன், மற்றொன்று திராவிடன். மோகன் பகவத் சொல்லும் சாதியும் மதமும் மறந்துவிடு என்கிறார். மதமும், சாதியும் மறந்து விடுவதல்ல, வேரோடு அழித்து எரிய வேண்டும். சாதியும் மதமும் இல்லை என எப்படி சொல்ல முடிகிறது? காங்கிரஸ் கட்சியை தவிர்த்து எதிர்க்கட்சி அமைப்பது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வழி வகுக்கும் என பணிவுடன் தெலுங்கானா முதல்வரிடம் கூறி வந்துள்ளேன்.
மோடி பாவம் எழுதி கொடுப்பதையும், சொல்லி கொடுப்பதையும் பேசுபவர். தமிழ்நாட்டை குறி வைத்து விட்டார்கள். அங்கு, அங்கு பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் இவர்கள் தான். ஆனால் குற்றத்தை பெரியார் அமைப்புகள் மீது போடுகிறார்கள். 54 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்கிறான். எதுக்கு விலைவாசி உயர்வை எதிர்த்தா? தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவா? இவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் இந்துகளை யார் காப்பாற்றுவார்கள்? அப்பாவி இந்துக்களுக்காக தான் நாம் குரல் கொடுக்கிறோம்.
தமிழ்நாட்டில் 200 பேர் தான் இருக்கிறார்கள். பெரியார் மண்ணில் வால் ஆட்டி வருகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சரின் முன்னிலையில் சொல்கிறேன். வாலை சுற்றி வையுங்கள். இல்லாவிட்டால் வால் நறுக்கப்படும். அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள். எம்.ஜி.ஆர் மீதும், மோடியா லேடியா சாவல் விட்ட ஜெயலலிதா மீதும் மதிப்பு வைத்தால் பாஜகவை கைவிட வேண்டும். நாளையே அறிக்கை விட வேண்டும். நாளை பா.ஜ.க.வில் ஒரு எம்பி வந்து விட்டால், அடுத்த 5 ஆண்டிகளில் ஜெய் அனுமான், ஜெய் ஸ்ரீராம் சொல்லும் காலம் வந்துவிடும்”.
இவ்வாறு அவர் பேசினார்.