(Source: ECI/ABP News/ABP Majha)
ராம பக்தர்களை குண்டர்கள் என கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்கவேண்டும் - வானதி
”பொறுக்க முடியாமல் இந்து பக்தர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக குண்டர்கள் என அமைச்சர் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்”
கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”வேல் வழிபாடு என்பது நம்முடைய கலாச்சாரத்தில் பல்ல நூறு ஆண்டுகளாக கலந்து உள்ளது. வேலினை வழிபடுவதால் துன்பங்களில் இருந்து விடுபடுவதுடன் வாழ்க்கையில் வளங்களுக்காகவும், அமைதிக்காகவும் இந்த வேல் வழிபாடு ஆன்மீக பெரியோர்களால் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்மீகமும், பக்தியும் மக்களோடு இரண்டறக் கலந்து இருக்கிறது. பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதுவே மற்ற மாநிலங்களில் பாத யாத்திரை செல்வபவர்களுக்கு அரசால் அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. அரசாங்கமே முன்னின்று அறநிலைத் துறை மூலம் மிகப் பிரமாண்டமாக செய்து வருகிறார்கள். பழனி பாத யாத்திரை செல்வோருக்கு ஒரு சில தனியார் நிறுவனங்கள் தனியார் அமைப்புகள், பெரிய மனிதர்கள் மூலம் அவர்கள் கொடுக்கின்ற அன்னதானம் மற்றும் இடம் ஆகியவற்றைத் தான் இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்தும் கோவையில் இருந்தும் பழனிக்கு வரக்கூடிய பாதி யாத்திரை பக்தர்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டர் தொலைவிலும் அறநிலைத் துறை சார்பாக பந்தல் அமைத்து உணவு, மற்றும் உறங்க வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். பழனி மலை முருகன் கோவில் உண்டியலில் வரக்கூடிய வருமானத்தை எடுத்து ஏழை - எளிய பக்தர்களுக்கு உதவி செய்திட வேண்டும். இன்னும் எத்தனையோ கோவில்களில் உள்ள பக்தர்களுக்கு சிரமம் உள்ள நிலையில் அதை சரி செய்ய வேண்டும். கோவையில் புராதான கோவிலான கோட்டை சங்கமேஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இந்த அரசாங்கத்தில் இருந்து ஒரு அமைச்சர் கூட வரவில்லை.
புராதான கோவிலான இந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கார் குண்டுவெடிப்பில் இருந்து இந்த கோவை மாநகரத்தையே காப்பாற்றி உள்ளது. ஒரு அமைச்சர் கூட வரவில்லை. இது தான் இவர்கள் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதை. திராவிட மாடல் அரசு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க மறுத்துவிட்டு கோவிலில் வரும் பணத்தை எல்லாம் அதன் மேம்பாட்டிற்கு செலவிடாமல் பாரதிய ஜனதா கட்சி எந்த கோவிலுக்கு செல்கிறார்கள். எங்கு பக்தர்களுடன் இருக்கிறார்கள் என்று கண்காணித்து அவர்கள் மீது வழக்கு போடுவது மட்டுமே அவர்களது வேலையாக இருக்கிறது.
பாஜகவினர் கோவிலுக்குள் வந்து அராஜகம் பண்றோம்னு ஒரு அமைச்சர் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். செய்ய வேண்டிய வேலையை விட்டு விட்டு தமிழக அரசும் சரி அறநிலைத் துறை அமைச்சரும் சரி தேவையில்லாமல் கோவில் விஷயங்களில் தலையிட்டு பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.
ராமர் கோவில் கும்பாபிஷேகக்தையொட்டி கோவில்களில் குண்டர்களை வைத்து பா.ஜ.க அச்சுறுத்தியதாக அமைச்சர் சேகர்பாபுவின் கருத்து என்பது இதை விட ராம பக்தர்களை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. எத்தனையோ தனியார் அமைப்புகள் கடிதம் வழங்கியும் அனுமதி வழங்காத நிலையில் எல்.இ.டி திரையில் கும்பாபிஷேத்தை பார்த்தது கலவரத்தை தூண்டுவதா என்றும் வயிற்று எரிச்சலில் இதுபோன்று பேசுவதாகவே தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்தார்கள். பிரதமர் கூறியது போல் கோடிக்கணக்கான பெண்மணிகள் வீட்டில் பூஜை செய்தனர். இதெல்லாம் பொறுக்க முடியாமல் இந்து பக்தர்கள் மீது இருக்கும் காழ்புணர்ச்சியின் காரணமாக குண்டர்கள் என அமைச்சர் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழகத்தில் நடப்பது முகலாயர் ஆட்சியா? ஒரு காலத்தில் மதமாற்றத்திற்காக அந்த அடையாளச் சின்னங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது மதத்தை அழிக்க வந்த ஆக்கிரமிப்புக்காரர்கள் போல் இந்த திராவிட மாடல் அரசு நடந்து கொள்கிறது. தமிழகத்தில் ஆன்மீகத்தின் மீது பெரிய ஆதிக்கம் செலுத்துவதாக தாங்கள் உணர்வதாகவும் கோவையில் 15, 20 பேருக்கு மேல் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்து இருக்கின்றனர். இந்த ஜனநாயக நாட்டில் இந்து மக்கள் கோவிலுக்கு சென்றால் மட்டும் அவ்வளவு கஷ்டப்படுத்துகிரார்கள். இவையெல்லாம் அதிகார மமதையின் உச்சம். உங்க மாநாடு என்பது காலி நாற்காலி மாநாடு. இளைஞர் அணி மாநாடு என கூறி உங்கள் மகனுக்கு முடிசூட்டும் மாநாடு நடத்தி விட்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்து இந்து மக்களின் உணர்வுகளை திரும்பத் திரும்ப நசுக்க பார்க்கிறது இந்த அரசு” எனத் தெரிவித்தார்.