Vanathi Srinivasan: ‘அண்ணாமலைக்கும் எனக்கும் இடையே பிரச்சனையா?’ - வானதி சீனிவாசன் விளக்கம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம்.
கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார். பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பெண்கள் பள்ளியில் 8 முதல் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு ரத்தசோகை, சர்க்கரை பரிசோதனை முகாம் கோவை தெற்குத் தொகுதியில் செய்வதற்கான திட்டம் துவங்கியுள்ளோம். வளர் இளம் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாக இருப்பதால், இந்த திட்டத்தை துவங்கியுள்ளோம். மாணவிகளுக்கு நோய் கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் முக்கியம். எனவே மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அட்டை வழங்குவதில் சில சுணக்கங்கள் இருக்கிறது. இது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கல்யாண மேடைகளை எதிர்க்கட்சிகளை திட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்துள்ளார். ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார். எதற்காக இந்த பயம் முதல்வருக்கு வருகிறது? அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கு என்ன காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரா? எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜகவிற்கு விருப்பம் இல்லை. கலைத்ததும் இல்லை. எதற்காக முதல்வருக்கு இந்த பயம் வந்திருக்கிறது என்ன தெரியவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு பிரதமர் மோடி எரிச்சல் அடைந்திருக்கிறார் எனவும் முதல்வர் பேசியிருக்கின்றார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது. நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்வர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.
மணல் கடத்தல், மது பிரச்சினைகள், அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச லாவண்யம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை முதல்வர் கவனிக்க வேண்டும். பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்சனைகளை மூடி மறைக்கவே. தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதல்வர் முயல்கிறார். தமிழகத்தின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின் முயற்சி செய்ய வேண்டும்.
தமிழக கவர்னர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார் , இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது? ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா? கவர்னரைப் பற்றி எழுதியிருக்கக் கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள். மாநிலத்தின் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்த செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தி குறிப்புகள் வருகிறது. ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் வந்திருக்கிறதா?
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது, இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் இருக்கிறது. இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகின்றோம். கோவையில் நடந்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து எவ்வளவு அநாகரிகமாக பேசினார்கள்? திமுகவினரின் மேடை நாகரீகத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் பெண்களை எவ்வளவு இழிவாக பேசுவார்கள், கேவலமாக பேசுவார்கள், பெண் அரசியல் தலைவர்களை இழிவு படுத்துவார்கள் என்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள். பா.ஜ.க மேடையில் பேசிய அந்த வார்த்தைகளை நான் தவிர்த்து இருக்க வேண்டும். இன்னும் அதற்குள்ளேயே ஏன் இருக்க வேண்டும்?” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/