'நாங்கள் என்ன கழுதையா? மாடா?' - தரமற்ற ரேசன் அரிசியை வாங்க மறுத்து பழங்குடிகள் போராட்டம்!
கடந்த 3 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும், அரிசியை சமைத்து சாப்பிட முடியவில்லை என மலைவாழ் பழங்குடி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மாவடப்பு, காட்டுப்பட்டி ஆகிய பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. மலைப் பகுதியில் வனத்திற்குள் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் இவ்விரு கிராமங்களுக்கு, மாவடப்பு கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்குவது வழக்கம். இதற்கு முன்னர் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று காடம்பாறையில் ரேசன் பொருட்களை வாங்கி வந்த நிலையில், ரேசன் பொருட்கள் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கே வந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும், அரிசியை சமைத்து சாப்பிட முடியவில்லை என மலைவாழ் பழங்குடி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இன்று காலை இக்கிராம மக்களுக்கு வழங்கப்பட இருந்த அரிசி முற்றிலும் தரமற்றதாக இருப்பதாக கூறி, அந்த அரிசியை வாங்க மறுத்து ரேசன் அரிசி வழங்கும் அரசு ஊழியர்களை முற்றுகையிட்டு பழங்குடிகள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து காட்டுப்பட்டியை சேர்ந்த சின்னப்பன் கூறுகையில், "போன பீரியட்ல அரிசி நல்லா தான் வந்திட்டு இருந்தது. எலக்சன் அப்புறம் போடுற அரிசி நல்லா இல்லை. பார்க்க பாலிசியா அழகா இருக்கு. ஆனா சாப்பாடு வேக லேட் ஆகுது. அரிசி கல்லு மாதிரி இருக்கு. சாப்பிட முடியல. போன மாசம் போட்ட அரிசி ரொம்ப மோசம். அதை நாய் கூட சாப்பிடவில்லை. நல்லரிசி போடுங்கனு கேட்டா, இஷ்டம் இருந்தா வாங்குங்க, இல்லனா வாங்கதீங்கனு சொல்லுறாங்க. அரிசி மாச கடைசியில தான் போடுறாங்க. சரியாக பில் தருவதில்லை. எங்களுக்கு நல்ல அரிசி போட நடவடிக்கை எடுக்கணும்" என அவர் தெரிவித்தார்.
பழங்குடியின பெண்கள் கூறுகையில், "நாங்கள் என்ன கழுதையா? மாடா?. மனுசங்க தானே. அரிசி மஞ்ச கலரில் கொட்டையா இருக்கு. இவ்வளவு மோசமா அரிசி போட்ட எப்புடி சாப்பிடுவது?. நாங்க ரேசன் அரிசியை நம்பி வாழுறோம். நல்ல அரிசி இந்த மாசம் போடுவாங்க, அடுத்த மாசம் போடுவாங்கனு பார்த்த, நல்லதா போடுவது இல்லை. மாச கடைசியில தான் அரிசி போடுறாங்க. இப்படி இருந்தா நாங்க எப்படி வாழுறது?" என்றனர்.
இது குறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ் கூறுகையில், "வனம் சார்ந்து வாழும் பழங்குடிகள் ரேசன் அரிசியை நம்பி தான் இருக்கிறார்கள். அரிசி சரியில்லை என்றால், நகர பகுதியில் உள்ளவர்கள் கடைகளில் அரிசி வாங்கிக் கொள்ள முடியும். காட்டுக்குள் அதற்கான வாய்ப்பும் இல்லை, அவர்களிடம் நுகர்வு சக்தியும் கிடையாது. தரமான அரிசி பழங்குடி மக்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.