கோவை : 10 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கு : சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்..
சார்பு ஆய்வாளர் முருகனுக்கும், சாவித்திரிக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கிக் கிளை மேலாளர் அமித்குமார் என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், ’22 ம் தேதியன்று மதியம் 12 மணியளவில் பெண் உட்பட நான்கு பேர் வங்கிக்கு வந்து காசோலை ஒன்றைக் கொடுத்தனர். அதில் 9,99,91,000 ரூபாய் நிரப்பட்டிருந்தது. அந்தப் பணத்தை சென்னையில் ராம்சரண் அன்கோ என்ற பெயரில் நிறுவனத்தை மாற்ற வேண்டும் என கொடுத்தனர். காசோலையிலுள்ள கையெழுத்தில் சந்தேகம் வந்ததால் வங்கி ஊழியர், கிளை மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார். பெரிய தொகை என்பதால் செக்கில் குறிப்பிட்டிருந்த மத்தியபிரதேசம், போபாலிலுள்ள நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அந்த நிறுவனம் சார்பில் இவ்வளவு தொகைக்கான காசோலை கொடுக்கவில்லை என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 10 கோடி ரூபாய்க்காக கொடுக்கப்பட்ட காசோலை போலி என்பது உறுதியானது. விசாரணையில் போலி செக்கைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டது தெரியவந்தது. எனவே, போலி காசோலையைக் கொடுத்து ஏமாற்றத் திட்டமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் ஜாபர் என்கிற இர்பான்கான், கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்தீவ், கோவையைச் சேர்ந்த சாவித்திரி (40), கோவை துடியலூரைச் சேர்ந்த முருகன் (55), சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பானுமதி (44), திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் (39), நாராயணன், கோபிநாதன் ஆகியோர் மீது கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் முருகன் என்பவர் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருவது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவருக்கும் அறக்கட்டளை நடத்தி வரும் சாவித்திரி என்பவருக்கும் பழக்கம் இருப்பதும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு மருத்துவ விடுப்பு எடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சார்பு ஆய்வாளர் முருகன் ஆறாவது எதிரியாக கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். இந்நிலையில் சார்பு ஆய்வாளர் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்று பணியிடை நீக்கம் செய்து கோவை சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி மோசடி நிறுவனங்கள் மீதான புகார்கள் வழக்குப் பதிவு செய்ய காலம் தாழ்த்தி, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரின் பேரில் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அடுத்தடுத்த நாட்களில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.