கோவை - சீரடி இடையே தனியார் இரயில் சேவை துவக்கம்: பயணிகளுக்கு இவ்வளவு வசதிகளா?
கோவையில் இருந்து சீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ரயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், இன்று மாலை வடகோவை இரயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தை துவங்கியது.
பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக கோவையில் தனியார் இரயில் சேவை இன்று துவங்கியுள்ளது. கோவையைச் சேர்ந்த எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இந்த இரயிலை இயக்குகிறது. கோவையில் இருந்து சீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ரயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், இன்று மாலை வடகோவை இரயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தை துவங்கியது. இரயிலுக்கு மாலை அணிவித்து இருந்த நிலையில், மங்கள வாத்தியங்கள் முழங்க நடிகர் சேரன் உள்ளிட்டோர் பூக்களைத் தூவி இரயில் சேவையை துவக்கி வைத்தனர்.
பயணிகளுக்கான வசதிகள்
ரயில் சௌத் ஸ்டார் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த இரயிலில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரெயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது. இந்த ரயில் 20 படிகளைக் கொண்டதாகும். இந்த ரயிலின் உள்பக்கம் பிரத்தியேகமாக சேர்கள் போடப்பட்டு உள்ளது. ரயிலின் பெட்டிகள் சாய்ராம் பக்தி பாடல்கள் ஒலிக்கப்படுகிறது. சிறப்பம்சமாக ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, மருத்துவர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சீரடி சாய்பாபா கோவிலில் இரயில் பயனாளிகளுக்கு சிறப்பு விஐபி தரிசனம் வழங்கபடுகிறது. சீரடியில் அனைத்து பக்தர்களுக்கும் இருவர் மற்றும் மூவர் தங்கும் வகையிலான ஏசி வசதியுடன் கூடிய அறைகள் வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு விபத்து காப்பீடு பிரிமியம் இந்த நிறுவனத்தால் ஏற்கப்பட்டுள்ளது. சீரடி ரயில் நிலையத்திலிருந்து ஸ்ரீ பாபா கோவில் செல்வதற்கு பேருந்து வசதிகளும் செய்யப்படுகிறது. குளிர்சாதன வசதி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தேவையான போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கப்படும். அவற்றை பயனாளர்கள் தங்கள் வசம் எடுத்துச் செல்லலாம்.
பயணத்தின் போது பயணிகள் களிப்புறும் வகையில் கோவில்களில் சிறப்புகள், வழங்கப்படும் உணவுகள் குறித்து இனிமையாக ஒரு ரேடியோ ஜாக்கி போல் தகவல் தெரிவிக்கப்படும். அனைத்து நிகழ்வுகளையும், நெருக்கடிகளையும் கட்டுப்படுத்த விமானங்களில் உள்ளது போல் ஒரு ரயில் கேப்டன் இருப்பார். ரயில் பயணிகளின் சுகாதாரத்தை பேணி காக்க ஒரு சிறந்த மருத்துவர் ரயிலில் உள்ளார். ரயில்வே பாதுகாப்பு காவல் துறையுடன் இணைந்த சிறப்பு பாதுகாப்பு ஊழியர்களும் பணியாற்றுவார்கள். ரயில் பெட்டிகளை பராமரிக்க ஏசி மெக்கானிக்கல் உட்பட போதிய பராமரிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் மாசற்ற நச்சுப் புகை இல்லாத ரயிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ’சவுத் ஸ்டார் ரயில்’ சேவை கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் உள்ள பல்வேறு சாய்பாபா அறக்கட்டளைக்கு சுமார் 250 பயணச்சீட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரெயில் கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட் ஆனது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இரயில் கட்டணம்
இந்த ரெயில் சேவையின் கட்டணமானது ரெயில் கட்டணம், பேக்கேஜ் கட்டணம் என இரண்டு வகையாக உள்ளது. கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரெயில் கட்டணம் ரூ.2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணமானது 4,999 ரூபாயாக உள்ளது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 உள்ள நிலையில், தனியார் ரெயில் கட்டணம் ரூ. 5,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999 ரூபாயாக உள்ளது. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 உள்ள நிலையில், தனியார் ரெயில்கட்டணம் ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 9,999 ரூபாயாக உள்ளது. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190 அனால் தனியார் ரெயில் கட்டணம் ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 12,999 வசூலிக்கப்படுகிறது.
இரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்.யூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.