பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம் ; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று துவங்கிய சர்வதேச பலூன் திருவிழாவை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று துவங்கியது. சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் முதல் முறையாக நடத்தப்படும் பலூன் திருவிழா, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட், பிரேசில் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது.
60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பறக்கவிடப்பட்டன. பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களிலும் பலூன்கள் பறக்க விடப்பட்டது. இன்று அதிகாலையில் பலூன் திருவிழா தொடங்கியதை அடுத்து, வானில் வட்டமிட்டு சென்ற ராட்சச பலன்களை கண்டு பொள்ளாச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பலூன் திருவிழாவை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொண்டனர். மூன்று நாட்களும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது. இந்த பலூனில் 3 பேர் பயணிக்கலாம். வெப்ப காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பலூன் திருவிழா முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பலூன் திருவிழாவை பல மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ”இது போன்ற பலூன் திருவிழா வெளிநாடுகளில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பலூன் திருவிழா நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் உள்ளது. ராட்சச பலூன்களில் வெப்பக் காற்றை நிரப்புவது, ஒரே நேரத்தில் பலவகையான வண்ணங்களில் பலூன்களை வானில் காண்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பலூனில் பறப்பதற்கு ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் இதில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக கூட்டம் குறைவாக உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும். கட்டணத்தை குறைத்தால் மக்கள் குடும்பத்துடன் வந்து இரசித்து செல்ல வசதியாக இருக்கும்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்