கோவையில் டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு..!
மதுபிரியர்கள் அதிகம் கூடும் 9 டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஞாயிற்றுக்கிழமையன்று திறக்க டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவையில் மதுபிரியர்கள் அதிகம் கூடும் 9 டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஞாயிற்றுக்கிழமையன்று திறக்க டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில், கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், கடந்த வாரத்தில் திடீரென ஏறுமுகத்திற்கு சென்றது. இதனால் கோவையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கோவையில் இந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இன்று மீண்டும் தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ளது. தினமும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் பால், மருந்தகம், காய்கறி கடைகள் ஆகிய அத்தியாவசிய கடைகள் தவிர்த்த அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் செயல்பட தடை தொடர்ந்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தைகள், இறைச்சிக் கடைகள், பூங்காக்கள் மற்றும் மால்கள் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது பிரியர்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, துடியலூர் சந்திப்பு, வணிக வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 9 டாஸ்மாக் கடைகளை ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்க தடை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மதுபானக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்பார்வையாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





















