கோவையில் கொரோனா அதிகரிக்க என்ன காரணம்? - சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்
சென்னையில் உள்ளது போல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதுதான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று தினசரி பாதிப்பில் கோவை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கோவையில் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட இன்று 800 குறைவாக உள்ளது. அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம். தொழில் நிறுவனங்கள் நாளை முதல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.
கொரோனா பாதித்த நோயாளிகள் ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதால் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ளது போல கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை கோவையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 கார் ஆம்புலன்ஸ்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளது. நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று நிலையில், அங்கு பணிபுரியும் நபர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் 10 நாட்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் வீணடிக்காமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவரும் நிலையில், மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்தொற்றுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, மருத்துவமனைகள் சம்பாதிப்பதற்கான நேரம் இதுவல்ல, மனசாட்சியின்படி மருத்துவமனை நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக சூலூர் அருகேயுள்ள காடம்பாடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோய் சிகிச்சை மையம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, ஜி.சி.டி சிறப்பு சிகிச்சை மையம், அரசு கலை கல்லூரி சிறப்பு மையம் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.