கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி..? - சர்ச்சையும், விளக்கமும்..!
கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே தேவாங்கர் பள்ளி சாலையில் கோவை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வளாகத்தில் இன்று காலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் காக்கி கால் சட்டை அணிந்து பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் பள்ளி வாளகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அரசு பள்ளி வளாகங்களில் இது போன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற நிலையில், மாநகராட்சி பள்ளி வளாகத்திலேயே ஆர்.எஸ்.எஸ் பயிற்சி நடப்பது தெரியவந்தது. அரசுப் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், “கோவை மாநகராட்சி பள்ளி வளாகங்களில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பயிற்சி அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கல்வி அலுவலர் உரிய விசாரணை செய்து வருகிறார். விசாரணைக்கு பின்னர் உரிய முடிவு செய்யப்படும் பள்ளி வளாகத்தில் பயிற்சி நடைபெறுவது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சி செய்ய அனுமதித்தது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்ட தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் அங்கு சென்ற போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சியை முடித்து விட்டு பள்ளியின் கேட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். இதனிடையே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்க அனுமதித்த மாநகராட்சி பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், ”மாநகராட்சி பள்ளியிலேயே சட்ட விரோதமாக ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெறுவது கண்டிக்கத்தக்கது, தொடர்ந்து இதுபோல் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. மாநகராட்சி பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெறுவதை கண்டித்து பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாஜகவினர், ”ஆர்.எஸ்.எஸ் மூலமாக வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் சேவா தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றும் வேலையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதை திரித்து ஷாக்கா நடைபெற்றதாக தவறான குற்றச்சாட்டை தி.க.வினர் அரசியல் லாபத்திற்காக மேற்கொண்டுள்ளனர். கோவை முழுவதும் இன்று 23 இடங்களில் இப்படிப்பட்ட சேவா நிகழ்ச்சிகள் நடைபெற்றது” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்