கோவையில் ஆதரவற்றவர்களை மொட்டை அடித்து துன்புறுத்தியதாக புகார் ; காப்பகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
முதியவர்களை கடத்தி வந்து அடைத்து வைத்து துன்புறுத்துவதாக தொண்டாமுத்தூர் பகுதியில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் என்ற மலையடிவார பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்கள் பிடிக்கப்பட்டு, இந்த காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அழைத்துச் செல்லப்பட்டுவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்டு, நீல நிற சீருடை அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றவர்களை தனி அறையில் அடைத்து வைத்து இருந்ததாகவும், சிலரை குச்சியால் அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சிலர் வந்து பார்த்த போது, ஆதரவற்ற மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள் ஏராளமானோர் இருப்பது தெரிந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அன்பின் ஜோதி ஆசிரமத்தை சேர்ந்த ஜூபின் என்பவர் ஆதரவற்ற முதியவர்களை மீட்டு ஆசிரமத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவது தெரிவித்தது. மேலும் ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கோவையில் பல்வேறு பகுதிகளில் மீட்ட 250 பேரை அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே முதியவர்களை கடத்தி வந்து அடைத்து வைத்து துன்புறுத்துவதாக தொண்டாமுத்தூர் பகுதியில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். அதிகாரிகள் மொட்டையடிக்கப்பட்டவர்களின் விபரங்களை பெற்றுக் கொண்டு, காவல் துறையினர் உதவியுடன் காந்திபுரம் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது காப்பக நிர்வாகிகள் ஆதரவற்றவர்களை கடத்தி வந்து மொட்டையடித்து சித்ரவதை செய்வதாகவும், காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டுமெனவும் கூறி காப்பகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அங்கு திரண்டு இருந்தவர்கள் வாகனங்களை செல்ல விடாமல் கற்களை போட்டு வழிமறித்தனர். இதனால் காவல் துறையினருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் முதியவர்களை ஏற்றி வந்த வேனை சேதப்படுத்தி கீழே தள்ளி கவிழ்த்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கி திரண்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ஆசிரம நிர்வாகிகள் மற்றும் ஆதரவற்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்