‛இனி வாங்குனா... வாட்ஸ் ஆப் தான்...’ கோவையில் அறிமுகம் செய்தார் ஆட்சியர் சமீரன்!
கோவையில் லஞ்சம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் அளிப்பதற்கு 95977 87550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் லஞ்சம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்க 9597787550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் இலஞ்சம் வாங்குவதை தவிர்க்கும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இலஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார். இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், 'கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் பாா்வையில் படும்படியும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்ற பலகை வைத்திருக்க வேண்டும். லஞ்சம் பற்றிய புகாா்களை நேரிலோ அல்லது செல்ஃபோன் வாயிலாகவோ தெரிவிக்கும் விதமாக காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக முகவரி, செல் ஃபோன் எண்ணுடன் கூடிய பலகை வைத்திருக்க வேண்டும்.
இதில் இயக்குநா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்- 293, எம்.கே.என்.சாலை, ஆலந்தூா், சென்னை-16. தொலைபேசி எண்: 044-24615989, 044-24615929, 044-24615949. காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, எண்-4, முதல் தெரு, ராமசாமி நகா், தீயணைப்புத் துறை அலுவலகம் அருகில், கவுண்டம்பாளையம், கோவை-30, தொலைபேசி எண்: 0422-2449500 மேற்கண்ட அலுவலகங்கள் தவிர கோவையில் லஞ்சம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் அளிப்பதற்கு 95977 87550 என்ற பிரத்யேக வாட்ஸ் ஆப் எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமும் பொதுமக்கள் லஞ்ச புகாா்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு அதிகாரிகளிடம் கலக்கத்தையும், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஆட்சியருக்கு பொதுமக்கள் பரவலாக பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
அரசு அலுவலகங்களில் இலஞ்சம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. சில அதிகாரிகளிடம் இலஞ்சம் கொடுத்தால் தான், எந்தவொரு வேலை நடக்கும் என்ள நிலை உள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் இலஞ்சம் வாங்குவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அரசு அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக இலஞ்சப் புகார்கள் இருந்து வருகின்றன. அவற்றை தடுக்க இலஞ்சப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X